தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தால் ம.வி.மு. போராட்டங்களை முன்னெடுக்கும்:பிமல் ரத்நாயக்க
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய பாதுகாப்பு செயலாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.அதனையும் மீறிச்செய்தால் மக்கள் விடுதலை முன்னணி போராட்டங்களை முன்னெடுக்கும் என குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பொத்துஹரவிலுள்ள ‘ரோமியோ’ விருந்தகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் மாறுபட்ட அரசியல் கலாசாரத்தை விரும்புபவர்கள்.இன்று பலதுறைகளிலும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.அரசியல்வாதிகள், அதிகாரிகள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள், சமயத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சேவை கருதி செயற்பட்டு வருகின்றனர்.இன்று அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் அரசியல் உல்லாச பயணிகளாகவே உள்ளனர்.
அரசியலில் மக்கள் விடுதலை முன்னணி பொய் கூறியதில்லை.அமைச்சர்களாக பத்விகள் வகித்த காலத்தில் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த யுகத்தில் தேவைகளை நிறைவேற்றவே நாம் இணைந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.இன்று யுத்தத்தை காட்டியே அரசாங்கம் வாக்குப்பிச்சை கேட்கிறது.யுத்தம் நிறைவடைந்து உள்ளது.ஜனநாயகமே இன்றைய தேவை.
பொன்சேகாவுக்கு கிடைக்கும் வாக்குகள் அனைத்தும் ஜனநாயகத்துக்குக் கிடைக்கும் வாக்குகள்.நாம் நாடாளுமன்றம் சென்றாலும், செல்லாவிட்டாலும் ஜனநாயகத்தைப் போராட்டத்தின் மூலம் காப்பாற்றுவோம்.அனைவருடனும் இணைந்து சகவாழ்வு அரசியலை முன்னெடுப்போம்.
ஊடகத்தை அடக்கிய ஜனாதிபதி தன் போலி தேர்தல் வெற்றியைக் கொண்டாடுகிறார்.அடுத்த அரசை அவர்கள் அமைத்தால் ராஜபக்ஷ குடும்பமும்,அரசியலில் சண்டியர்களுமே ஆட்சி புரிவர்.குடும்ப ஆதிக்கத்திற்கு உதவுபவர்களுக்கு மட்டுமே ராஜபக்ஷ அரசில் அனைத்தும் கிடைக்கும்.
ஜெனரல் பொன்சேகாவே நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தியவர்.அவருக்கு கிடைத்த வாக்குகள் மூவின மக்களிடமிருந்தும் சமமாக கிடைத்தது.இதுவே மக்கள் சமமாக வாழக்கூடிய நிலையாகும்.ஏப்ரல் 8 ஆம் திகதிக்கு பின்னர் அனைவரும் இணைந்து சகவாழ்வு அரசொன்றை உருவாக்குவோம்.ஜனாதிபதி பதவியேற்கவுள்ள நவம்பர் 19 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சகவாழ்வு அரசாங்கமொன்று உருவாக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சியையும்,மக்கள் விடுதலை முன்னணியையும் ஒன்று சேர விடாமல் தடுக்க ஜனாதிபதி முனைகின்றார்.எதிர்காலத்தில் நாடாலுமன்றத்தில் ஐ.தே.மு – ம.வி.மு இணைந்து செயற்படும்.இதில் கருத்து வேறுபாடு இல்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார்.அப்படியான ஒருநிலை ஏற்பட்டால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராகப் போராடும்.இனி நாடு பிளவுபடாது. ஜனநாயகத்தை மதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்பட எமக்கு எவ்வித தடைகளும் இல்லை.பாதுகாப்பு செயலாளருக்கு எவ்வித உரிமையுமில்லை. எதிர்வரும் 8 ஆம் திகதிக்குப் பின்னரே எமது போராட்டம் உச்சநிலை பெறும்.அதற்கு அனைத்து மக்களும் பூரண ஆதரவு நலக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply