இலங்கையர்களின் புதிய புகலிடக் கோரிக்கை இடைநிறுத்தம்

அவுஸ்திரேலியாவானது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள மக்களால் முன்வைக்கப்படும் அனைத்து புதிய புகலிடக் கோரிக்கைகளையும் உடனடியாக இடைநிறுத்தம் செய்வதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மேற்படி நாடுகளின் சூழ்நிலைகள் மாற்றமடைவதை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஈவன்ஸ் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பலமான செய்தியொன்றை அனுப்புவதாக அமைவதாக அவர் கூறினார். படகுகளில் அவுஸ்திரேலியாவை வந்தடையும் புகலிடம் கோருபவர்களின் தொகை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருபவர்களில் அநேகர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களாவர். புகலிடம் கோருபவர்கள் 70 பேரை ஏற்றி வந்த படகொன்று இந்து சமுத்திரத்தில், அவுஸ்திரேலிய தடுப்பு முகாமைக் கொண்டுள்ள கிறிஸ்மஸ் தீவின் கடற்கரைக்கு அப்பால் மூழ்கியதையொட்டியே அவுஸ்திரேலியாவின் இந்த புதிய அறிவிப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டில் தற்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது முதற் கொண்டு புகலிடம் கோருபவர்களை ஏற்றி வந்த 100க்கு மேற்பட்ட படகுகள் அந்நாட்டு கடற் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. மேற்படி விவகாரம் குறித்து அந்நாட்டு பிரதமர் கெலின் ருத் கடும் அரசியல் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடம் கோருபவர்களின் விஸா விண்ணப்ப செயற்கிரமங்களை உடனடியாக இடைநிறுத்தம் செய்வது படகுகளின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது. புகலிடம் கோருபவர்களின் தொகை அதிகரிப்பதானது இந்த வருடம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய தேர்தலில் உணர்வுபூர்வமான ஒரு விடயமாக அமைவதாகக் கூறப்படுகிறது.

இலங்கை நிலைமைகளை எதிர்வரும் 3 மாத காலத்திற்கும் ஆப்கானிஸ்தான் நிலைமைகளை எதிர்வரும் 6 மாத காலத்திற்கும் மதிப்பீடு செய்யவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இடை நிறுத்தப்பட்ட இந்த புகலிடக் கோரிக்கைகள் மேற்படி நாடுகளுக்கு வழங்கப்பட்ட காலத் தவணையின் பிற்பாடு மீள் மதிப்பீடு செய்யப்படும்.

புகலிடம் கோருபவர்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் மட்டும், அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என அந்நாடு நம்புகிறது.

முறையற்ற விதத்தில் படகுகளில் வந்து புகலிடம் கோருவது தடுத்து வைக்கப்படுவதற்கு தொடர்ந்து வழிவகை செய்கிறது. ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகை சட்டங்களை அவுஸ்திரேலியா வலுப்படுத்தி வருகிறது.

ஆட்களைக் கடத்துபவர்களுக்கு நிதி மற்றும் ஆதரவு வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் புதிய சட்டவிதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply