அரசின் அமோக வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
நீண்ட காலத்திற்குப் பின்னர் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைவதும் பல புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரி வாகியிருப்பதும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துடனான பாராளுமன்றத்தின் விசேட அம்சங்களாக உள்ளன. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தேர்தல் முறையின் கீழ் அறுதிப் பெரும் பான்மையுடனான அரசாங்கம் அமையவுள்ளது. கடந்த 8ம் திகதி நடந்த தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலுமிருந்து பல புதுமுகங்கள் தெரிவாகியிருக்கிறார்கள். இவர்களுடனான பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சியினரைவிட இரண்டு மடங்குக்கு கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது.
வெளியிடப்படாத இரண்டு மாவட்ட முடிவுகளை விட, 20 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு. 117 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐ. தே. கட்சி 46 ஆசனங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்துள்ளது. தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் போட்டியிட்டு 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. வெற்றிக் கிண்ண சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய முன்னணி 5 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. இந்த நிலையில் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் 34 வாக்குச் சாவடிகளுக்கும் திருமலை மாவட்டத்தில் கும்புறுப்பிட்டியில் ஒரு வாக்குச் சாவடிக்கும் மீள்வாக்குப் பதிவு 20ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் முடிவு வெளியிடப்பட்டதும். நாடு முழுவதுமான தேர்தல் முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். அதன் பின்னரே கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை முழுமையாகத் தெரியவரும்.
இந்த நிலையில் புதிய அமைச்சரவையை அமைப்பதில் ஜனாதிபதி மும்முரமாக ஈடுட்படுள்ளாரெனத் தெரியவருகிறது. ஆயினும், இது தொடர்பான அறிவிப்புக்கள் இரண்டொரு தினங்களில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டையில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ, கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, மாத்தறை மாவட்டத்தில் சனத் ஜயசூரிய, கொழும்பு மாவட்டம் துமிந்த சில்வா, திலங்க சுமதிபால, மாத்தளை மாவட்டத்தில் சட்டத்தரணி வசந்த பெரேரா, காலி மாவட்டத்தில் நிஷாந்த முத்துஹெட்டிகம, சஜித் வாஸ்குணவர்தன, யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. சார்பில் போட்டியிட்ட எலன்ரின் உதயன், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சரவணபவன், சி. சிறி தரன், ஐ.தே.க. சார்பில் காலஞ்சென்ற முன்னாள் ஐ.தே.க. எம்.பியின் மனைவி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் புதியவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்கவும் புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
பிரதான கட்சிகளிலுள்ள பிரபலங்கள் பலர் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளதுடன் மாறாக புதியவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகள் பெற்று நாமல் ராஜபக்ஷ தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆறாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பியின் பிரபலங்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். பிமல் ரத்நாயக்க, லால்காந்த, நிஹால் கலப்பத்தி போன்றோர் தோல்வியடைந்துள்ளனர்.கொழும்பில் போட்டியிட்ட மிலிந்த மொரகொட, ரோஹித போகொல்லாகம போன்றோரும் தோல்வியடைந்துள்ளனர்.நுவரெலியா மாவட்டத்தில் வீ. இராதாகிருஷ்ணன், பீ. ராஜதுரை, திகாம்பரம், ஜே. ஸ்ரீரங்கா ஆகியோரும் புதியவர்களாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
உலகத் தலைவர்கள் வாழ்த்து
இதேவேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியுள்ளதைத் தொடர்ந்து உலக நாட்டுத் தலைவர்களிடமிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது இரட்டிப்பு வெற்றியாகும் என்றும், மனித உரிமைகளைப் பாதுகாத்து, பொருளாதார அபிவிருத்தி, அதிகாரப் பரவலாக்கம், இன நல்லிணக்கம் என்பவற்றை மேற்கொள்வதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்களென்றும் அமெரிக்கா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாகத் தெரிவாகியுள்ள அரசாங்கத்தோடு வரலாற்று ரீதியான உறவை வலுப்படுத்திக் கொள்ள முடியுமென நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply