ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்றம் செல்வதைத் தடுக்க அரசு முயற்சி
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்துக்கு செல்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக ஜனநாயக தேசிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னாள் இராணுவத் தளபதிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. எனினும் அவரை நாடாளுமன்றம் செல்லவிடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. இதுவரை அரசாங்கமோ அல்லது இராணுவமோ இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை.
எனவேதான், ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி இராணுவத் தளபதிக்கும், நாடாளுமன்றச் செயலாளருக்கும் இன்று கடிதம் அனுப்பியுள்ளோம். இராணுவ நீதிமன்றில் மேற்கொள்ளப்படும் இராண்டாவது விசாரணைகளுக்குத் தலைமை வகிக்கும் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அந்தப் பதவிக்குப் பொருத்தமற்றவர். மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய மீதான விசாரணைகளின் போது போலி சாட்சியம் வழங்கிய இவரை அப்பதவியில் நியமிக்க முடியாது” என்றார்.
“ஏப்ரல் 22ஆம் திகதி முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக 19ஆம் திகதி சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் அவரை நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்காத வகையில் தீர்ப்புகள் எதுவும் வழங்கக் கூடிய சாத்தியம் உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அநுரகுமார திசாநாயக்க,
“நிச்சயமாக. அவ்வாறானதொரு திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு நாம் எப்போதும் இடம்கொடுக்கப் போவதில்லை” என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply