இலங்கை இராணுவத் தளபதியின் கருத்தினால் தமிழகம் கொதித்தெழும பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்

இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கு அவர் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக்; கேட்க வேண்டும். இல்லையேல் தமிழகம் கொதித்தெழும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்.

தமிழக அரசியல் ஜோக்கர்கள் இலங்கையில் யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதை இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாதென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக் குறித்து வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர்களின் தன்மானத்துக்கு இலங்கை இராணுவத் தளபதியால் விடப்பட்டுள்ள சவாலுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அதன் மூலம்தான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் என மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக் கூற வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொட்பாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் முறையிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை இராணுவத் தளபதி,தமிழக அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகளென தரம் தாழ்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் விருந்தாலும் இராணுவத் தளபதியே ஜனாதிபதி போல் செயற்படுகிறார்.

இவர் பேசியிருப்பதை தனிப்பட்ட ஒருவரின் விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் இலங்கையின் குரலாக, அந்நாட்டு அரசின் குரலாக நோக்க வேண்டும்.

எனவே, இலங்கை இராணுவத் தளபதி தான் கூறியதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அதே வேளை, முப்படைகளின் தளபதி என்ற வகையில் இலங்கை ஜனாதிபதியும் மன்னிப்புக் கோர வேண்டும்.

இலங்கை இராணுவத் தளபதியின் இந்தக் கூற்றைத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி பிரதமரின் கவனத்துக்கும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு வர வேண்டும்.

அத்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை 48 மணி நேரத்துக்குள கொழும்புக்கு அனுப்பி நேரிலும் எச்சரிக்கை விட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply