மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் ஒரே இலக்கு நாட்டின் அபிவிருந்தியாகும்: ஜனாதிபதி

மக்கள் நாட்டுக்காக தமது கடமையை நிறைவேற்றியுள்ளனர். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் உங்கள் கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது. மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த பயணத்தின் ஒரே இலக்கு நாட்டின் அபிவிருத்தியாகும். இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. ம. சு. மு. சார்பாக 7 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு கூறினார்.

ஐ. ம. சு. மு. சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 7 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். அச்சமயம் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:-

இந்த நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ள அபிவிருத்தி அபிலாஷைகளை செயற்படுத்துவதே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி உல்லாசமாகவும் குடிகாரனாகவும் பொழுதைக் கழிக்காமல் தமது சுய மரியாதையை பாதுகாத்துக் கொண்டு செயற்பட வேண்டும். நாட்டு மக்கள் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கைக்கு மாறாக செயற்பட எந்த உரிமையும் இல்லை. சிரேஷ்ட அமைச்சரொருவரின் வழிநடத்தலில் தாம் பிறந்த நாட்டுக்காக சேவையாற்ற நீங்கள் அனைவரும் அணி திரள வேண்டும் என்று ஜனாதிபதி புதிய உறுப்பினர்களுக்கு கூறினார்.

நான்கு வருடங்களின் பின் நாம் தேர்தலுக்கு முகம் கொடுத்த போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நிறைவேற்றியதன் காரணமாகவே மக்கள் எமக்கு மீண்டும் ஆதரவு வழங்கியுள்ளனர். நாம் இந்த நாட்டை ஒன்றிணைத்தோம். அவ்வாறு ஒற்றிணைக்கப்பட்ட நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிராமத்துக்கு எடுத்துச் சென்றோம். அபிவிருத்தியை நகரத்துக்கு மட்டுமோ அல்லது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமோ நாம் கட்டுப்படுத்தவில்லை.

இதனைக் செயற்படுத்தும் போது நாம் பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. எனினும் நாம் அவற்றை வெற்றி கொண்டோம். நாம் ஒரு நாளாவது மின்சார வெட்டை மேற்கொள்ளவில்லை.எனவே அபிவிருத்தி யுகம்தான் எமது அடுத்த இலக்கு. இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். அதற்கான பொருளாதார திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த தகவல் உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் முன்னே செல்லலாம். இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியிருப்பது மிகப் பாரிய பொறுப்பாகும். இதனை நிறைவேற்றும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அன்று நாம் 7 வருடங்கள் பின் வரிசை உறுப்பினர்களாக இருந்தோம். அப்போது நாம் அரசியல் பற்றிப் படித்தோம். அதற்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் எமக்கு உதவினர். இதுதான் அன்று இருந்த நிலை. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது.

உங்களுக்கு எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் எந்தவொரு நேரத்திலும் என்னிடம் வரலாம். அத்துடன் எமது சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளனர். பிரச்சினைகளைப் பற்றிப் பயமின்றி பேசலாம். இந்த நாட்டு மக்களுக்காக உங்கள் சேவையை உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்ற நீங்கள் தயாராவீர்கள் என்பது எமது நம்பிக்கையாகும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply