புதிய அமைச்சரவையை மே நடுப்பகுதியில் மறுசீரமைக்கும் சாத்தியம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை மே மாதத்தில் மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களுக்கு அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை வழங்கும் பொருட்டுமே முதலாவது மறுசீரமைப்பு இடம்பெறவிருக்கின்றது.
பூட்டானில் நடைபெறுகின்ற 16 ஆவது தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரம் அங்கு செல்லவிருப்பதனால் அவர் சென்று திரும்பியதுமே அமைச்சரவை மறுசீரமைப்புக்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கின்றது. அவ்விசாரணை முடிவின் அறிக்கை மே மாதத்தின் முதல் வாரத்திலேயே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட இருக்கின்றது.
விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே கண்டியிலிருந்து ஆளும் தரப்பில் தெரிவான எட்டு பேரில் யாரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வது, யாருக்குக் பிரதியமைச்சர் பதவிக வழங்குவது என்பது போன்ற விபரங்களை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கின்றார். சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவிருப்பதனால் மே முதல் வாரத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதொகா கோரிக்கை
இந்நிலையில் தனக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு வேண்டாம் என்றும் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வகையில் அமைச்சொன்றை வழங்குமாறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருப்பதாகவும் அவ்வமைச்சில் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்பும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் இதொகா கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் காங்கிரஸ் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை கொட்டக்கலையில் காங்கிரஸின் தேசிய சபையும் நிர்வாக சபையும் கூடவிருக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் அமைச்சை பொறுப்பேற்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் காங்கிரஸின் மே தினக் கூட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்பு ஆகியன உள்ளடக்கிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு முன்னாள் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மே மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருக்கின்ற அமைச்சு வழங்கப்பட்டால் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அமைச்சிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி ஏற்படலாம் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply