பலவீனமான முறையிலிருந்து நாம் இந்தக் கோரிக்கையை விடுக்கிறோம் என்று மாத்திரம் நினைக்கவேண்டாம்:சிறிகாந்தா

முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளபோதும், மோதல் தீர்வாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
 
யாராவது ஒருவர் அரைமதில் ஏறிய பின்னர் மகிழ்ச்சியடைவது குறித்து தமது கட்சி கவலையடைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.

அரசாங்கப் படைகளால் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை அழிப்பதற்கோ இயலுமானதாக இருக்கலாம். ஆனால், அதுவே பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது” என அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்போதும், அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் கவனித்து தீர்வு காணாவிட்டால் பிரச்சினை முடிவுக்கு வராது என சிறிகாந்தா மேலும் கூறினார்.

உண்மையான பிரச்சினையை இனங்கண்டு அதற்குத் தீர்வொன்றை முன்வைக்காவிட்டால் எதிர்கால சந்ததியினரும் தமது உரிமைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

எனவே, போர்நிறுத்தத்துக்குத் தயார் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்று பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க முன்வரவேண்டும் என சிறிகாந்தா கோரிக்கை விடுத்தார்.
பலவீனமான முறையிலிருந்து நாம் இந்தக் கோரிக்கையை விடுக்கிறோம் என்று மாத்திரம் நினைக்கவேண்டாம் என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply