வவுனியா நிவாரண கிராமத்தில் கருணா அம்மானுக்கு கண்ணீர்மல்க வரவேற்பு

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல்முறையாக வவுனியா நிவாரணக் கிராமத்திற்கு நேற்று விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மானை) மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க வரவேற்றனர்.இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள எஞ்சியுள்ள மக்களையும் வெகு விரைவில் மீளக்குடியமர்த்துவதுடன் வெளிநாடுகளின் உதவியுடன் சொந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கருணா அம்மான் தெரிவித்தார்.

மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு நேற்று வருகை தந்திருந்த இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உதவித்தூதுவரையும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் சந்தித்துப் பேச்சு நடத்தினார். மீள்குடியேற்றப்பட்ட மற்றும் மீள்குடியேறவுள்ள மக்களின் விபரங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கருணா அம்மான் நேற்றுத் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர் கருணா அம்மான் மக்கள் தங்கியுள்ள விடுதிகளுக்குள்ளும் சென்று பார்வையிட்டார். இடம் பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக வெளிநாடுகளின் உதவிகளைப் பெறும் நோக்கில் அடுத்தவாரம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களையும் தாம் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கருணா அம்மான்  தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டிலும் கலந்து கொண்ட கருணா அம்மான், அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலதிக அரச அதிபர் என் திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பல அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதியும் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் என குறிப்பிட்ட பிரதி அமைச்சர் முரளிதரன் வன்னி மக்களுடைய வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்த புதிய அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது எனவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply