பிரிட்டனில் தொழிற் கட்சி தோல்வி; கொன்சர்வேடிவ் கட்சிக்கு கூடுதல் ஆசனம்
பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு பாராளுமன்றமே அமைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 13 ஆண்டு காலம் ஆட்சி செய்த தொழிலாளர் கட்சி தோல்வியடைந்துள்ளது. மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் ஒன்றை தவிர 649 தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப் பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 4150 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருந்தாலும் ஆளும் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சிகளுக்கு இடையேதான் கடுமையான போட்டி இருந்தது.
வாக்குப் பதிவு முடிந்ததும் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நேற்றுக் காலை தேர்தல் முடிவுகள் வெளியாகின. 633 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 299 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக திகழ்கிறது. தற்போதைய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 253 இடங்களை பிடித்து 2வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரீத்தி படேல், விதம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.
இவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எம்.பி ஆகி இருப்பது இதுவே முதல் முறை. இதுவரை வெளியான முடிவுகளின் படி, ஆளும் தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் உரிமையை தொழிலாளர் கட்சி அரசு இழந்துவிட்டதாக கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரோன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு எதிர்க் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்குத்தான் சாதகமாக அமைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி 90 இடங்களை இழக்கும் அபாயம் உள்ளது. இருந்தும் தன்னால் பலமான நிலையான, நேர்மையான அரசை அமைக்க முடியும் என்று பிரதமர் கோர்டன் பிரவுன் தெரிவித்துள்ளார். எனவே, தொழிலாளர் கட்சி கூட்டணி அரசை அமைக்க முயற்சி செய்யுமென தெரிகிறது.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு கன்சர்வேடிவ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பிரவுனின் இந்த முயற்சி அரசியலில் வெட்க கேடா னது என அக்கட்சியின் மூத்த தலை வர் வில்லியம் ஹக் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மற்றொரு இந்திய வம்சாவளி பெண் வலேரிவாஷ் வால்சால் சவுத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம். பியான கெய்த் வாஷின் சகோதரி ஆவார்.
பிரிட்டிஷ் பாராளுமன்ற வரலாற்றில் அண்ணன் – தங்கை இருவரும் ஒரே நேரத்தில் எம்.பியாக இருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கிடையே கோர்டன் பிரவுன் அமைச்சரவையில் மந்திரியாக இருந்த ஷாகித் மாலிக் டெவிஸ் பிரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 89 பேர் போட்டியிட்டனர். இவர்களில் இதுவரை 15 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிக பேர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply