கூட்டமைப்புடனான பேச்சு மஹிந்த சிந்தனை அடிப்படையில் : சம்பிக்க ரணவக்க

அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்கள் மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக்கொண்டதாகவே அமையவேண்டும். மேலும் அரசியலமைப்பு திருத்தங்களின்போது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் யோசனைகளைப் பெறவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் மின்சக்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறிவருகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இது தொடர்பில் மேலும் கூறியதாவது :

“அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களிடமும் யோசனைகளைப் பெறவேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்துவதாயின் அது மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமையவே இடம்பெறவேண்டும். அதனை மீறி எதுவும் இடம்பெறக் கூடாது. அதேவேளை, நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

முக்கியமாக அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply