ரணிலின் தலைமைக்கு எதிர்ப்பு உக்கிரம்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் முரண்பாடுகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றன.கட்சியின் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் மீதான குற்றச் சாட்டுகளும் கருத்து முரண்பாடு களும் கொதிநிலையை அடைந்துள் ளதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் தலைமைப் பொறுப்பு உட்பட பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டுமென சிரேஷ்ட உறுப்பினர்கள் மறுசீரமைப்பு யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் கட்சித் தலைமைப்பீடம் மீது நிதி மோசடி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின்போது வெளிநாட்டில் இருந்து வந்த 300 கோடி ரூபா பணத்தில் 200 கோடிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லையென உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். 100 கோடி ரூபா மாத்திரமே பிரசாரப் பணிகளுக்காக செலவிடப்பட்டதாகவும் மிகுதி 200 கோடி மாயமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ள கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் தலைமைப்பீடத்திடம் விசாரணை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் கட்சியின் உட்பூசல்கள் காரணமாக, நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி சிதைந்து சின்னாபின்னமாகும் நிலை ஏற்பட்டு ள்ளதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் ‘வாரமஞ்சரி’யிடம் கவலை தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி உள்ளார். கட்சியை வழிநடத்தும் ஆளுமையையும், வல்லமையையும் தற்போது இழந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து மாற்றுவதற்கு மேற்கொண்டு வரும் சகல முயற்சிகளையும் முறியடித்து வருகிறார்.

பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பும்பட்சத்தில் தாம் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாரென்று கூறுகிறார். ஆனால் கட்சியில் அனைவருமே அவர் விலக வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அவர்தான் விலக விரும்புகிறாரில்லை’ என்றும் அவர் கூறினார்.

தலைமை உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யவேண்டுமென கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும், இல்லையென்றும் இருவிதமான அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒரு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக்கூட உரியவாறு வெளிப்படுத்த முடியாத ஓர் அரசியல் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேநேரம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிலிருந்து வந்தவுடன் மறுசீரமைப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அந்தச் சந்திப்பின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply