செனல் 4 வீடியோ காட்சி : கெஹெலிய – சரத் மறுப்பு

செனல் 4 தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். செனல் – 4 புதிய தகவல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன வென்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த வருடமும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செனல் 4 தொலைக்காட்சி வீடியோ காட்சி ஒன்றை ஒளிபரப்பியது. அந்தக்காட்சி முற்றிலும் பொய்யானது என விஞ்ஞான ரீதியில், பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டதுடன் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் சவால் விடுத்தது. எனினும் இதுவரை அந்தத் தொலைக்காட்சிச் சேவை எமது சவாலுக்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. எனவே இவ்வாறான செயற்பாட்டை அந்த தொலைக்காட்சி நிலையம் ஒரு வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவே அரசாங்கம் கருதுகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மறுப்பு

இலங்கை இராணுவம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அது குறித்து அறியத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதுவர்

சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

“இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிராகரிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே படையினர் ஈடுபட்டனர் என்பதை சான்றுகளுடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம்.

இவ்வாறன மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கும் போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் பின்பற்றப்பட்டன.

பொதுமக்களுக்கு சிறிதளவு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என இராணு வத்துக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப் பட்டிருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவர்

லண்டனில் உள்ள இலங்கைத் துணைத்தூதுவர் ஹம்சா இது குறித்துக் கூறுகையில்,

“இந்த ஒளிநாடாவைத் தங்களிடம் முன்னதாகவே பகிர்ந்து கொண்டிருந்தால் அதன் நம்பகத்தன்மையை சரி பார்த்துக் கருத்துக் கூறியிருக்க முடியும். ஆனால், அப்படியான அவகாசம் எமக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் இறுதிக் க்ட்ட போரின் போது, விடுதலைப் புலிகள்தான் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். அவர்களிடமிருந்து மக்களை விடுவிக்கவே அரசுப் படைகள் மனித நேய நடவடிக்கையை மேற்கொண்டன. எனினும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களையும் விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது” என்றார். _

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply