தென் கொரியாவிடம் வட கொரியா மன்னிப்புக் கேட்க வேண்டும் : ஒபாமா

தென்கொரியா கடற்படை கப்பலை மூழ்கடித்ததற்காக அந்த நாட்டிடம் வடகொரியா உடனடியாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தியுள்ளார். தென்கொரியாவின் கடற்படை கப்பல் ஒன்று வடகொரியா கடல்பகுதி அருகே நின்றிருந்தபோது, அது திடீரென கடலில் மூழ்கியது. அதிலிருந்த 44 கடற்படை வீரர்கள், தண்ணீரில் மூழ்கி மடிந்தனர். இந்தச் சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து தென்கொரியா விசாரணைக்குழு அமைத்து விசாரித்தது. இதில், அமெரிக்கா உட்பட பல வெளிநாட்டு நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

இந்த குழு விசாரணை நடத்தியதில், தென்கொரியா கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு வடகொரிய நீர் மூழ்கிக்கப்பலின் தாக்குதலே காரணம் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தென் கொரியா, வடகொரியா மீது குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை வடகொரியா மறுத்து விட்டது. இந்த சம்பவத்தில் உலக நாடுகள் பலவும் தென்கொரியாவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தன.

பொருளாதார தடை?

இதற்காக வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தப் பிரச்சினை குறித்து புகார் செய்வோம் என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது. அத்துடன், வடகொரியா மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முயற்சி எடுப்போம் என்றும் தென்கொரியா அறிவித்து உள்ளது. பொருளாதார தடை கொண்டு வந்தால், தென்கொரியா மீது போர் தொடுப்பதாக தென்கொரியா மிரட்டல் விடுத்தது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்கப்பலை மூழ்கடித்ததற்காக தென்கொரியாவிடம் வடகொரியா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அத்தோடு போர்க்கப்பலை மூழ்கடித்ததில் தொடர்பு உடையவர்களைத் தண்டிக்க வேண்டும். மேலும் தென்கொரியாவை மிரட்டும் போக்கைக் கைவிடவேண்டும் என்று கேட்டுள்ளார்.

தன் இராணுவ தளபதிகளுக்கு தென்கொரிய தளபதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், வடகொரியாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் ஒபாமா உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்து நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புப் போர் பயிற்சிகளை மேற்கொள்வோம் என்று தென்கொரியா இராணுவ அமைச்சர் கிம் டே யங் தெரிவித்து இருக்கிறார். எல்லையில் தென்கொரியா பலத்த பாதுகாப்புகளை மேற்கொண்டிருக்கின்றது. வடகொரியா மீதான எதிர்ப்பு பிரசாரங்களை ஒலிபெருக்கி மூலம் விடுக்க தென்கொரியா தொடங்கியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா, பதட்ட நிலைமை தொடர்ந்து நீடித்தால், தென்கொரிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக வடகொரியா மிரட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply