இந்திய – அமெரிக்க பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

இந்தியா, அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை முதல் முறையாக இன்று ஆரம்பமாகிறது. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேற்று முன்தினம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கு, இருதரப்பு உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு இடையில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

இதில், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பிருத்விராஜ் சவுகான், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், உள்நாட்டுப் பாதுகாப்புக்கான சிறப்புச் செயலர் யு.கே.பன்சால், சுற்றுச்சூழல் செயலர் விஜய் சர்மா மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அமைச்சர் கிருஷ்ணா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்குத் தலைமை வகிக்கின்றனர். வெளியுறவுக் கொள்கைகள் குறித்து நிருபமா ராவ், அமெரிக்க அரசியல் விவகார இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் இருவரும் ஆலோசிக்கவுள்ளனர்.

இந்திய அமெரிக்க விவசாயம் குறித்து, யு.எஸ்.ஏ.ஐ.டி., அதிகாரி ராஜ் ஷா மற்றும் அமெரிக்க மேலாண்மை இணையமைச்சர் ரொபர்ட் டி.ஹார்மட்ஸ் இருவரும் பேசுகின்றனர். இதுகுறித்து அமெரிக்க அரசியல் விவகார இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், “பேச்சுவார்த்தைகள், இந்தியாவை உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் இன்றியமையாத நட்பு நாடாக உயர்த்தும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply