திரைப்பட விழாவும் இந்திய முதலீடும் இலங்கையின் வளர்ச்சிக்கு அங்கீகாரம் ஐ/பா விழாவில் ஜனாதிபதி மஹிந்த
இலங்கையின் மீதும் அதன் பொருளாதாரக் கொள்கையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினாலேயே சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை இந்தியா இலங்கையில் நடத்த முன்வந்துள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் அதிகளவு முதலீடுகளைச் செய்யவும் இந்தியா தற்போது முன்வந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவின் முன்னோடியாக நேற்று இந்திய – இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் விசேட அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.வர்த்தக சம்மேளன அமர்வினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தியாவின் பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான அனுபம் கெர்ருக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பேசுகையில்:-
பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வருடங்களுக்கு முன்னர் தான் நாம் வெற்றி கண்டோம். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், சிறுவர் போராளிகள், குண்டுத் தாக்குதல்கள் என பயங்கரவாதத்துக்கு வேறு பரிமாணத்தை எல். ரி. ரி. ஈ. யினர் அறிமுகப்படுத்தினார்கள்.
இருப்பினும் இராணுவ ரீதியான எங்கள் வெற்றியானது உலகளாவிய ரீதியில் அறியப்பட்டபோதும், பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. ஆதலால் பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதாயின் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை வருடம்தோறும் 6 சதவீதத்திலும் பார்க்கக் கூடுதலான வளர்ச்சியை எமது நாடு அடைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் பணவீக்கம் 22 சதவீதமாகவும் 2009 இல் 4 வீதத்திலும் பார்க்கக் குறைவாகவும் இருந்தது.
உட்கட்டமைப்புகள் நாம் என்றும் எதிர்பாராத வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடித்துறை முகங்கள், ரயில்வே பாதைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
எமது நாட்டின் வேலை வாய்ப்பின்மை 5.7 சதவீதத்திலும் குறைவாக இருக்கின்றது. உலகில் வேலை வாய்ப்பின்மை மிகக் குறைந்தளவில் இருப்பது இலங்கையில் மட்டும் தான். நாட்டிலுள்ள அனைவரும் 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவது இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
தனிநபர் வருமானம் கடந்த 5 வருடங்களில் 2000 அமெரிக்க டாலர்களாக இருக்கின்றது. இது அடுத்த 5 வருடங்களில் 4000 டொலராக அதிகரிக்கப்படுவதை இலக்காகக் கொண்டு நாம் செயற்படுகின்றோம்.
உலகப் பொருளாதாரச் சிக்கலை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். எமது எந்தவொரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ பொருளாதாரச் சிக்கலால் மூடப்படவில்லை. சர்வதேச உணவுச் சிக்கலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.
பயங்கர வாதத்துக்கெதிராகப் போரிட்டுக் கொண்டே நாம் அடுத்தடுத்து எழுந்த இச் சிக்கல்களையும் எதிர்கொண்டோம். அபிவிருத்தியல்லாமல் சமாதானம் இல்லையென்பதை நாம் திடமாக நம்புகின்றோம்.
இடம் பெயர்ந்தவர்களை மிகக் குறுகிய காலத்தில் மீளக் குடியமர்த்திய நாடு இலங்கையே. எல். ரி. ரி. ஈயினரால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்களை புனர்வாழ்வளிப்பதிலும் நாம் வெற்றி கண்டிருக்கின்றோம். இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் காணச் செய்வதே எமது இலக்கு. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாம் ஆரம்பித்த துறைகள் எல்லாம், எமது மக்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகளை வழங்குகின்றன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை. இராமாயண காலத்தில் இருந்து தொடர்பவை. ஒரு பொதுவான மரபு ரீதியான பொருளாதார வர்த்தக முயற்சிகளே இரண்டு நாடுகளிலும் காணப்படுகின்றன. தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மேலும் வலுச்சேர்க்கின்றோம் என்றார்.
இலங்கையில் நீங்கள் முதலிடவிரும்பினால் உங்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. ஆற்றல், திறமை, அர்ப்பணிப்பு, ஆர்வம் போன்ற தனித்துவத்தன்மைகளையும் நீங்கள் இங்கு காணலாம். இந்த வர்த்தக சம்மேளனம் இரு நாடுகளுக்குமிடையிலான புதிய உறவுகள் புதிய வர்த்தக முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தருர் ஆகியோரும் உரையாற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply