முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு: அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

இலங்கையின் தடுப்பு முகாம்களில் உள்ள முன்னாள் போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் நோக்குடனேயே அரசு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வடபகுதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவுடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் யாழ். செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்,

அமைச்சுப் பதவியேற்ற பின்னர் முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், யாழ். மாவட்டம் அதிக அபிவிருத்தியை அடைந்துள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. இத்தகைய வளர்ச்சிக்கு யாழ். மாவட்ட அரச அதிபரின் திட்டமிடலுடன் இணைந்த நிர்வாகத் திறமையே முக்கிய காரணமாகும். இந்நேரத்தில் அவரைப் பாராட்டுகிறேன். வன்னியில் மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தயாரித்துள்ளோம்.

அதற்காகவே அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம். அத்துடன், உயர்பாதுகாப்பு வலயத்தைக் கட்டம் கட்டமாக அகற்றி மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான விடயங்களை ஜனாதிபதியிடம் கலந்துரையாடி வருகின்றேன். விரைவில் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்று நம்புகிறேன். மஹிந்த அரசோ, அதுசார்ந்த அமைச்சர்களோ இனத்துவேஷம் இல்லாதவர்கள். ஆகையால் இந்த அரசின் காலத்திலே எமக்கான சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

அதனால்தான் நாம் அரசுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்தோம். அத்தகைய இணைச் செயற்பாட்டினால்தான் எமது தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் வெல்வது மட்டுமல்ல, அபிவிருத்திகளையும் கட்டியெழுப்ப முடியும். தடுப்பு முகாமில் உள்ள 8 ஆயிரம் இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் உரையாடியுள்ளோம். தடுப்பு முகாமில் உள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சிகளை அரசு வழங்கிவருகிறது.

இதன் முதற்கட்டமாக 200 யுவதிகளுக்கு கொழும்பில் உள்ள ஆடைக் கைத்தொழிற்சாலையில் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய விடயம் நல்லதொரு ஆரம்பம் என்று நான் கருதுகிறேன். முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிராக அரசு வழக்குத் தொடராமல் உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply