கொழும்பில், கண்கவர் பிரமாண்ட நிகழ்வு; முப்படையின் அணி வகுப்பு சாகசங்கள்

யுத்தத்திற்கு முடிவுகட்டப்பட்ட ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வெற்றி விழா கொழும்பு காலி முகத்திடலில் நேற்றுக் காலை  எட்டு மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபெற்றது. நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரியார் சகிதம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, விமானப் படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் தமது பாரியார் சகிதமும் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பிர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரச உயர் அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம் மற்றும் படை வீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

தேசியவெற்றி விழா கொண்டாட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசியக் கொடியே ஏற்றி காலை 8.28 இற்கு ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனையடுத்து ஜனாதிபதியை கெளரவிக்கு முகமாக 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து அணி வகுப்பில் கலந்து கொண்டிருந்த சகல படை அணிகளையும் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி விசேட ஊர்தியொன்றில் அழைத்துச் செல்லப்பட்டார். அணி வகுப்புப் படையினரைப் பார்வையிட்டு வந்த ஜனாதிபதி தலைமை உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து காலை 9.35 இற்கு வெற்றி அணி வகுப்பு ஆரம்பமாகி 11 மணி வரை இடம் பெற்றது. இதில் மாவிலாறு முதல் இறுதி யுத்தம் வரை பயன்படுத்தப்பட்ட இராணுவத் தளபாடங்களுடன் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் அணி வகுத்துச் சென்றனர். இவர்களுள் 537 முப்படை அதிகாரிகளும் 8960 வீரர்களும் பங்கு கொண்டனர். பெண் படை வீராங்கனைகள் அணி வகுப்பில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாக இருந்தது.

அணி வகுப்பு நடைபெற்ற சம காலத்தில் கடற் படையினரின் யுத்தக் கப்பல்கள், படகுகள் என்பனவும் காலி முகத்திடலில் கடற் பரப்பில் அணி வகுத்துச் சென்றன. அதே நேரம் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்பனவும் வானத்தில் வேகமாகச் சஞ்சரித்தன.

தவிரவும், ஏவுகணைகள், பீரங்கிகள், பல்குழல் பீரங்கிகள், மோட்டார் குண்டுகள், கவச மற்றும் கனரக வாகனங்கள், மோப்ப நாய்கள் உட்பட போர் நவீன உபகரணங்கள் பலவும் அணி வகுப்பில் கொண்டு செல்லப்பட்டன.

இறுதியாக, விமானத்தில் ஆறாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்த 30 பரசூட் படைப் பிரிவினர் விழா திடலில் வந்திறங்கினர். இவர்களுள் இரண்டு பெண் வீராங்கனைகளும் அடங்குவர். முற்பகல் 11 மணிக்கு அணி வகுப்பு நிறைவடைந்தது.

வெற்றி விழாவை முன்னிட்டு கொழும்பில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டு மாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply