கிழக்கு கொலைகள், கடத்தல்கள் பற்றி விசாரிக்க விசேட பொலிஸ் குழு

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 
 
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக அங்கு கடத்தல் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும்; அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான கொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

அதிகரித்திருக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கத்தால் கூறப்படுகின்றபோதும் அங்கு தொடர்ந்தும் வன்முறைகள் நடந்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகச் சம்பவங்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு தொடர்புபட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை குறைந்தது 30 கொலைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இறுதியாக வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டுவிட்டது, விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கிழக்கே முன்னுதாரணம் என அரசாங்கம் கூறி வருகின்ற போதும் அங்கு கொலைகளும் கடத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. குற்றவாளிகள் தப்பிச் செல்கின்றனர்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அதிகரித்திருக்கும் படுகொலைகள் மற்றும் கடத்தல்களைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மட்டக்களப்பு நகரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply