நளினியை விடுதலை செய்யுங்கள் :தொல்.திருமாவளவன்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 500 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பேசப்படுகிறது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தண்டனைக் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு சிறைவாசிகளிடையே உருவாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் நீண்டகாலமாக விசாரணை இல்லாமல் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களையும், ஆயுள் காலத் தண்டனைக் காலத்தையும் தாண்டி சிறைப்பட்டிருக்கும் நளினி அவர்களையும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளான இஸ்லாமிய இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
செம்மொழி மாநாட்டையொட்டி சென்னை மாநகரத்தில் கடைகளில் விளம்பரப் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டுமென சென்னை மாநகர மேயர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. ஆனாலும், அந்த அறிவிப்புக்கு மதிப்பளித்து விளம்பரப் பலகைகள் முழுவதுமாக இன்னும் தமிழில் எழுதப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
தமிழில் மாற்றி எழுதுபவர்களும் சொற்களை மாற்றாமல் பிறமொழிச் சொற்களை தமிழ் எழுத்துகளாக மட்டுமே மாற்றியுள்ளனர். இது மேலும் அன்னைத் தமிழை அவமதிக்கும் செயலாகும். எனவே எழுத்து மாற்றமாக அமையாமல் சொற்கள் மாற்றமாக அமையும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், சென்னை மாநகரத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவில் இதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆவன செய்ய தமிழகத்தின் எல்லைப் புற மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகள் போன்ற யாவற்றிலும் தமிழ் அல்லாத பிற மொழி ஆதிக்கமே மேலோங்கியுள்ளது.
குறிப்பாக, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்தையும் புறக்கணித்து விட்டு கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதும் போக்கு நிலையாக உள்ளது. இவற்றையும் சீர்ப்படுத்த வேண்டியது செம்மொழி மாநாடு நடைபெறும் இச்சூழலில் சுட்டிக்காட்ட வேண்டியதாக அமைந்துள்ளது. ஆகவே, இது தொடர்பாகவும் தமிழக அரசு உறுதிமிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply