பாதுகாப்பு செயலர் கோட்டாபய நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அடங்கிய உயர் மட்டக்குழுவினர் நேற்று முல்லைத்தீவு பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர். இவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள், மக்களின் மேம்பாடு, மீள் குடியேற்றம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
முல்லைத்தீவு, வட்டப்பளை, முள்ளியவளை உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்த இவர்கள் அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட துடன் மதிப்பீடும் செய்தனர். முல்லைத்தீவை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவை முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா வரவேற்றார். முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளருக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இங்கு நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் அம் மாவட்டத்தின் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.
இங்கு முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் யுத்தத்திற்குப் பிந்திய நிலைமைகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றும் பணிகள் இராணுவம் மற்றும் சிவிலியன்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான உயர் அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளருக்கு விரிவாக விளக்கினர்.
மக்கள் நலன் கருதிய பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான ஆலோச னைகளை வழங்கிய பாதுகாப்புச் செயலா ளர், ஆயிரக் கணக்கான படைவீரர்கள் மத்தியில் அவர் விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார். அடுத்து வட்டப்பளை பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படை தளபதியுமான எயார் சீப் மாசல் ரொசான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க, பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய உட்பட பலர் இந்த விஜயத்தில் பங்கு பற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply