முள்ளிவாய்க்கால் சம்பவத்தை நினைவுகூர்ந்து தமிழ்நாடு மாணவர் தற்கொலை
“முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் மறக்கக் கூடாது” என கடிதமொன்றை எழுதிவிட்டு சென்னை நுண்கலைக் கல்லூரியைச் சேர்ந்த சசிக்குமார் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.நேற்று தற்கொலைசெய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தினால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதம் பொலிஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது: உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும். உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா ? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும். மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.
தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன். நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன் என்று எழுதியுள்ளார் சசிக்குமார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply