தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரே குரலில் ஒலிக்கத் த.கூட்டமைப்பிற்கு அழைப்பு: டக்ளஸ் தகவல்

தமிழ் மக்களின் அரசியல், நாளாந்தப் பிரச்சினைகள் குறித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டும் என்ற நோக்குடன் தமிழ்க் கட்சிகளின் கூட்டமொன்று ஜூலை முதலாம் திகதி கொழும்பில் நடை பெறும்  இக்கூட்டத்துக்குத் த.தே.கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்மையான அக்கறை இருக்குமானால் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டுக்கு அது வரவேண்டும்.

கடந்தகால உயிரிழப்புகளுக்கும், சொத்து அழிவுகளுக்கும் காரணம் தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக செயற்பட்டதே ஆகும் எனவும் அமைச்சர் சொன்னார்.

தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பு ஒன்று வியாழக்கிழமை மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போதே அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா) அணித் தலைவர் எஸ்.ஸ்ரீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, ஈரோஸ் செயலாளர் பிரபா மற்றும் சிறீ ரெலோ தலைவர் உதயன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply