ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்க வேண்டும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்க வேண்டுமென தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு உதாசீனம் செய்யக் கூடாது என சமாதானப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த கோரிக்கைகளுக்கு சாதகமான முறையில் பதிலளிப்பதனால் நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன், சர்வதேச ரீதியிலான நன்மதிப்பு உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதாக தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.
ஏதேனும் நிபந்தனைகள் நாட்டின் இறைமையை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தால் அது குறித்த பகிரங்கமாக பேசி இணக்கப்பாட்டை எட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளது. நிபந்தனைகளை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிப்பதன் மூலம் இரண்டு பிரதான நன்மைகள் கிட்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் மூலம் பொருளாதாரம் நன்மை அடையும் எனவும், நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் மூலம் நல்லாட்சி குறித்த இலங்கை அரசாங்கத்தின் அக்கறையை வெளி உலகிற்கு எடுத்தியம்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply