தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசியல் கட்சியாக பதிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியாக இன்று செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் தலைமையிலான குழு இன்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை சந்தித்து கூட்டமைப்பை புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்து கொள்ள விருப்பதாக கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் புதிய கட்சியாக பதிவு செய்யப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் குறித்தும் இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களையும் உள்ளடக்கிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றது.

நான்கு தமிழ் அமைப்புக்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான சிரேஷ்ட அரசியல் தலைவர் இரா. சம்பந்தன் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவே செயற்பட்டு வந்தார். இதுவரையில் கூட்டமைப்புக்கென்று முக்கிய பதவிகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையிலேயே தற்போது புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் அது தொடர்பில் நேற்று முன்தினம் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் ஆலோசனைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் இதன்போது உறுப்பினர்களிடையே வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இருந்த போதிலும் இது தொடர்பிலான முடிவுகள் எட்டப்பட்டுள்ள நிலையிலேயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவிருக்கின்றது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2004 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தவென 22 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 14 உறுப்பினர்களையே பெற்றுக் கொண்ட போதிலும் அது பாராளுமன்றத்தில் மூன்றாவது அரசியல் சக்தியாக திகழ்கின்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply