மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை கைது செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் மகேஸ்வரனை படுகொலை செய்த நபர்களை கைது செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். மகேஸ்வரனின் படுகொலையாளிகளை உனடடியாக கைது செய்து, தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.
 
அண்மையில் சாவகச்சேரி பிரதேசத்தில் மாணவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கும் தமக்கு தொடர்பிருப்பதாக சிலர் குற்றம் சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மகேஸ்வரன் படுகொலைச் சம்பவம் மற்றும் சாவகச்சேரி மணவன் படுகொலை ஆகியன தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம்மையும் தமது கட்சியையும் கடுமையான பாராளுமன்றில் விமர்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும், குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை நடத்தி தம்மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்குமாறு, அமைச்சர் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட போது விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமரர் மகேஸ்வரனின் பாரியாருமான விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் தேவானந்தா இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி உறுப்பினர்களுக்கு சேறு பூசுவதற்கு சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply