இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு: இந்திய பிரதமர் உறுதி

சுயமரியாதை, சுய கவுரவம் மற்றும் பாதுகாப்புடன் தமிழ் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் நியாயமான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் அமைந்த அரசியல் தீர்வு காண இந்தியா அத்தனை முயற்சியும் எடுக்கும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதி யளித்ததாக இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.,க்களான சம்பந்தம், சேனாதிராஜா, விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமத்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நிலைத்து நிற்க கூடியதுமான தீர்வு ஒன்றை அடைவதற்கு, இந்தியா முழுமையான பங்களிப்பை செய்யும் என்ற வாக்குறுதியை பிரதமர் வழங்கியதாக, சந்திப்புக்கு பிறகு சம்பந்தம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: வன்னியில் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கும், புனர்வாழ்விற்கும் 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வந்தமைக்கு, இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டோம். அடிப்படை வாழ்வாதாரத்திற்கும், உள்கட்டமைப்பு, அபிவிருத்தி சம்பந்தமாக வடக்கிலே இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்விற்கு பேருதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டோம். மேலும், புனர்வாழ்வு அளிக்கும் வகையில் வெளியேற்றப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களிலேயே அமர்த்தபட வேண்டிய அவசியத்தையும் பிரதமரிடம் எடுத்துக் கூறினோம். வடக்கிலும், கிழக்கிலும் உள்ள உயர்பாதுகாப்பு வளையங்கள் அகற்றப்பட்டு, மக்கள் சொந்த நிலங்களுக்கு திரும்பி சகஜவாழ்க்கையை மீட்டுத்தர வேண்டும். இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ளமுடியாத வகையில் அமைந்த விகிதாச்சார மாற்றங்களை கொண்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

இனப்பிரச்னைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதும், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும், மக்கள் சுயமரியாதை, கவுரவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றோடு வாழ்வதற்கும் நியாயமான அரசியல், பொருளாதார, சமூக கலாசார அபிலாஷைகளை கண்டு அடைவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயல்படுவதற்கான தனது தீர்மானத்தையும் பிரதமர் வெளிப்படுத்தினார். இவ்வாறு சம்பந்தம் கூறினார். இந்த குழுவினர், அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் ஆகியோரையும் சந்தித்துப் பேசினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply