ஆப்கானிஸ்தான், ஈராக் ,சோமாலியா போன்ற நாடுகளின் யுத்தங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் பாரியளவு பாதிப்புக்கள் இடம்பெறவில்லை
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில சக்திகள் அண்மையில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தை பெரிதுபடுத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சர்வதேச நாடுகளுடன் சிறந்த உறவுகளைப் பேண வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும், அதற்காக இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கில் சில சக்திகள் பிரச்சினைகளை பூதாகாரமாக வெளிப்படுத்த முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திக் காரியாலயம் போராட்டங்களினால் மூடப்படவில்லை எனவும், சில காலங்களுக்கு முன்னரே குறித்த அலுவலகத்தை பாங்கொக்கிற்கு இடம் நகர்த்த தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்தினால் சில மேற்குலக நாடுகள் இலங்கை மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உண்மையை நிலைமையை கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜே.என்.பி.யின் போராட்டங்கள் தொடர்பில் கொழும்பு இராஜதந்திர பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டு காலமாக கொடிய யுத்தத்தை வெற்றிக் கொண்ட இலங்கை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சர்வதேச சமூகம் சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இலங்கைப் படையினர் இழப்புக்களை எதிர்நோக்கியதாகவும், தற்போது ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சோமாலியாவில் நடைபெற்று வரும் யுத்தங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் பாரியளவு பாதிப்புக்கள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply