ஜனாதிபதி தலைமையில் நாளை கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நாளை கிளிநொச்சியில் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாவட்டந்தோறும் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. வழமையாக கொழும்பில் பிரதி புதன்கிழமை தோறும் அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
மாவட்ட ரீதியிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை 14 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. 26 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வடக்கில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவிக்கையில், சில வாரங்களுக்கு முன் மாவட்ட ரீதியாக அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன்படி முதல் கூட்டம் கிளிநொச்சியில் நாளை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாளைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டமொன்றும் அங்கு இடம்பெறவுள்ளது. இரணைமடு பிரதேசத்தில், மீள்குடியேறிய மக்களைச் சந்தித்து, ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply