எமது தனித்துவத்தை பாதுகாக்க பிள்ளைகள் முன்வர வேண்டும் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
உலகிலிருந்து என்ன தான் எண்ணங்கள், சிந்தனைகள், கருத்துக்கள் வந்தாலும் எமது தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கு பிள்ளைகள் முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.கல்வி அறிவில் மாத்திரமல்லாமல் கைத்தொழில்துறை மற்றும் மொழி அறிவிலும் எமது பிள்ளைகளை மேம்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு ரோயல் கல்லூரியின் 175 வது வருட நிறைவின் நிமித்தம் இடம் பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். ரோயல் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கை மிகவும் முக்கியமான யுகத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இந் நாட்டின் முன்னணிப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதையிட்டுப் பெரிதும் பெருமைப்படுகின்றேன்.
1835 ம் ஆண்டில் இருபது பிள்ளைகளுக்குத் தனியாகக் கல்வி புகட்டுவதற்காக “கொழும்பு அகடமி” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிலையமே இப்போது ரோயல் கல்லூரியாக விளங்குகின்றது. இது இந்நாட்டின் முன்னணி பாடசாலையாக விளங்குகின்றது. அதேநேரம் இப் பாடசாலை பல முக்கிய சாதனைகளையும் புரிந்திருக்கின்றது.
அநகாரிக தர்மபால, ஈ. டபிள்யூ. பெரேரா, சேர். ஜேம்ஸ் பீரிஸ் போன்ற பெளத்த தலைவர்கள் மாத்திரமல்லாமல் சேர். பொன் அருணாச்சலம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்களும் அன்று கொழும்பு அகடமியில் கற்றவர்கள் தான்.
இலங்கைக்கு ஜனாதிபதி, பிரதமர் எதிர்க் கட்சித் தலைவர் போன்ற உயர் பதவிக்குரியவர்களை இக் கல்லூரி வழங்கி இருக்கின்றது. மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கையூமும் இக் கல்லூரியில் கற்றவரே. இக் கல்லூரி தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்குக் கெளரவத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றது. இது ரோயல் கல்லூரியில் கற்பவர்களுக்குப் பெரும் பெருமையாகும்.
ரோயல் கல்லூரி சகல வசதியையும் கொண்டிருக்கும் ஒரு கல்லூரியாகும். இக் கல்லூரியில் பலமொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எல்லாவிதமான விளையாட்டுக்களும் இங்குள்ளன. குறிப்பாக கணனி கற்கை முதல் விவசாயக் கற்கை வரை இங்கு கற்க வசதி வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கல்வி கற்பதற்கு ஓரளவு கஷ்டப்படத் தான் வேண்டும். இதனை எவரும் மறுக்க முடியாது.
கல்விக்கான சகல வசதி வாய்ப்புக்களையும் வழங்கி இருப்பதன் நோக்கம் மாணவர்கள் சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல மாறாக அவர்கள் கடின உழைப்பாளிகளாக திகழ வேண்டும் என்பதே ஒரே நோக்கம்.
கணனி பயன்பாடு காரணமாக எமது நாட்டில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதாக முன்னர் கூறப்பட்டது. குழந்தைகள் எந் நேரமும் கணனியுடன் இருப்பதாலேயே இந் நிலை ஏற்படுவதாகவும் சிலர் கூறினர். இருப்பினும் ரோயல் கல்லூரி அந்த விமர்சனத்தை வெற்றி கொண்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாள அட்டையை வழங்கி அவர்கள் பாடசாலைக்கு நேரத்திற்கு சென்றுள்ளார்களா என்பதை வீட்டிலிருந்தபடியே பெற்றோர் அறிந்து, தெரிந்து கொள்ளக் கூடிய வசதியைப் பெற்றோருக்கு ரோயல் கல்லூரி வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply