சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ் விஜயம்
யாழ். அச்சுவேலி பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள வர்த்தக வலயப் பகுதிக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் நேற்று விஜயம் செய்தனர். முதலீட்டு நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு வருகை தந்த இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்றதுடன் நிலைமைகளை எடுத்துக் கூறினார். இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜயம்பதி பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார். இலங்கையில் முதலீடு செய்துள்ள முன்னணி ஆடை உற்பத்தி தொழிற்சாலை நிறுவனங்களான பிரான் டெக்ஸ், மாஸ் ஹோல் டிஅஸ், டிமெக்ஸ் கார்மண்ட்ஸ், ஒமேகா லைன், ஒரிக் எப்பரல்ஸ் ஆகிய ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களே யாழ். குடாநாட்டில் முதலீடு செய்வதற்காக நேற்று சென்றிருந்தனர்.
கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் முதலீட்டாளர்கள் நேற்று குடாநாட்டுக்குச் சென்றனர். அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததுடன் அச்சுவேலி பகுதிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டனர். அச்சுவேலி வர்த்தக வலய பகுதிக்கு 65 ஏக்கர் நிலம் தேவை என முதலீட்டாளர்கள் தெரிவித்ததுடன் முதற்கட்டமாக 25 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையும் கைத் தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து வடபகுதியில் மேற்கொள்ளவிருக்கும் முதலீட்டு அபிவிருத்தியில் பங்கேற்பதற் காகவே இவர்கள் அனைவரும் நேற்று யாழ். குடாநாட்டுக்குச் சென்றனர். அச்சுவேலி மேற்குப் பகுதியில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜயம்பதி பண்டாரநாயக்க தலைமையில் இவர்கள் அனைவரும் யாழ். கச்சேரியில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச் சபையின் அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டமொன்றையும் நடத்தினர். அச்சுவேலி வர்த்தக வலயத் திட்டத்தினூடாக யாழ். குடாநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் மோகன்ராஸ், இலங்கை மின்சார சபை வடபிராந்திய அத்தியட்சகர் முத்துரட்ணானந்தசிவம், வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ். பிரதம பொறியியலாளர் சுதாகரன், வீதி அபிவிருத்தி, திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் பாலகிருஷ்ணன், வலி கிழக்கு காணி அதிகாரி என். நமசிவாயம், நீர் வழங்கல் அதிகார சபை மாவட்ட பொறியியலாளர் கே. செல்வகுமார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
அரச உயரதிகாரிகளினால் முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய நீர் வழங்கல், மின்சார விநியோகம், காணி வழங்கீடு உட்பட அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்ட நிலையில் அது குறித்து தமது திருப்தியை வெளியிட்ட முதலீட்டாளர்கள் விரைவிலேயே தாம் முதலீடுகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரியப்படுத்தினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply