புகலிடக் கோரிக்கையாளர்கள் அனைவரும், புலிகள் என்ற கருத்து பிழையானது

சகல புகலிடக் கோரிக்கையாளர்களும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற அரசாங்கத்தின் கருத்து பிழையானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்கக் கூடும் என்ற காரணத்தினால் இலங்கை இவ்வாறான குற்றச்சாட்டை சுமத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய வானொலிச் சேவைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரும் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என அண்மையில் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அல் கய்தா இயக்கத்திற்கும் தொடர்பு இருந்ததாக குறிப்பிடப்படும் தகவலில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் இலங்கை ஏன் அதிக கவலையடைகி;ன்றதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான சாட்சியங்கள் வெளி உலகிற்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இலங்கை இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதிகளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கோர்டன் வைஸ் ஏற்கனவே கருத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோர்டன் வைஸின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. எவ்வாறெனினும், கோர்டன் வைஸின் கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்கள் எனவும், அவை ஐக்கிய நாடுகள் அமைப்பின் கருத்தாகாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் சுமூகமடைந்துள்ளதாகவும், சர்வதேச புகலிடச் சட்டத்தின் கீழ் இலங்கையர்களுக்கு தொடர்ந்தும் புகலிடம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. கோர்டன் வைஸ் 14 வருடங்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கடமையாற்றி அண்மையில், தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply