பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயமானது புலிகளுக்கு எவ்விதத்திலும் சாதகமாக அமையாது : எதிர்க்கட்சித் தலைவர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயமானது புலிகளுக்கு எவ்விதத்திலும் சாதகமாக அமையாது. யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்கள் நிலை குறித்து ஆராய்வதற்காகவே அவர் இங்கு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (டிச. 15) தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமைக் காரியாலயமான ஸ்ரீகொத்தாவில் இன்று காலை இடமபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தொடர்பில் நாம் ஆட்சேபிக்கமாட்டோம். அவரை நாம் வரவேற்கிறோம்.

புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கமாக உள்ளது. இந்த வேளையில் பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயம் குறித்து சந்தேகங்களும் கிளப்பப்படுகின்றன. ஆனால் இது தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கைப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வினையும் காண முடியாது. அவர்களின் ஆதரவு நமக்கு என்றும் தேவை. இந்தியாவின் ஆதரவுடன் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆதரவை வழங்கும்.

இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வைக் காணக் கூடிய வழிவகைகள் உள்ளன. ஆனால் அரசாங்கம் அது தொடர்பில் கவனஞ் செலுத்தாமல் கிளிநொச்சியைப் பிடிக்கப் போகிறோம் என்றே கூறிக் கொண்டிருக்கிறது. மாத இறுதிக்குள் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோமென்று கடந்த மாதம் அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இன்னும் அது சாத்தியமாகவில்லை.

வடக்கில் இடம்பெறும் யுத்தம் காரணமாக சுமார் மூன்று இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச ரீதியாக நமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகவும் இன்று உருவெடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply