23 வருடங்களின் பின்னர் முல்லை நீதிமன்றம் ஆரம்பம்
இருபத்திமூன்று வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
இந்தத் திறப்பு விழா வைபவத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஏ. எம். எம். ரியால், கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ. சிவகுமார், வவுனியா மாவட்ட நீதவான் எம். கணேசராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அண்மைக் காலமாக வவுனியாவில் இயங்கி வருகின்றது என்பதும் இதற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நீதி நியாயாதிக்கச் செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் இந்த நீதிமன்றம் முல்லைத்தீவில் செயற்படுவதுடன் ஏனைய தினங்களில் அது வவுனியாவில் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் இந்த ஏற்பாடு இருக்கும் என்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இந்த நீதிமன்றம் முழுமையாக முல்லைத்தீவில் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் போர்க் காலத்திற்கு முன்னர் இயங்கி வந்த அதனுடைய சொந்த இடத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை புதிதாக அமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் இந்தக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply