மர நிழல்களின் கீழ் தொடரும் கல்வி

இலங்கையில் போர்ச்சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள முல்லைத்தீவு பிரதேசத்தில் கல்வி நடவடிக்கைகள் இன்னும் பூரணமாக வழமைக்குத் திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு கல்வி வலயத்தில் போர்க்காலத்தில் இயங்கிவந்த 54 பாடசாலைகளில் 16 பாடசாலைகளே மீள்குடியேற்றப் பிரதேசங்களில் தற்போது இயங்குவதாக வலயக்கல்விப் பணிப்பாளர் எம். தேவேந்திரன் தெரிவிக்கின்றார்.

மீள இயங்கத் தொடங்கியுள்ள பாடசாலைகளும் எவ்வித வளங்களோ அடிப்படை வசதிகளோ இன்றி இருப்பதால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்தனர். குறிப்பாக முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் கட்டிடங்கள் முழுமையாக அழிந்துள்ள நிலையில் தற்காலிக கொட்டில்களிலும் மர நிழல்களின் கீழும் மாணவர்கள் தமது கல்வியை ஆரம்பித்துள்ளனர்.

சுனாமியின் பின்னரும் மீள் எழுந்தது

ஏற்கனவே சுனாமி பேரலையினால் 89 மாணவர்களை இழந்து முற்றாக அழிவடைந்த இந்தப் பாடசாலை, மீள் கட்டுமாணப் பணிகளின் மூலம் மீண்டும் சீரமைக்கப்பட்டு இயங்கி வந்தது.பின்னர் கடந்த ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மீண்டும் முற்றாக அழிவுக்குள்ளான முல்லைத்தீவு மகா வித்தியாலயம், தற்போது போருக்குப் பின்னர் மீள்குடியேற்றப்பணிகள் இடம்பெற்று பல மாதங்கள் கடந்த பின்னரும் சீரமைக்கப்படாத நிலையிலேயே காட்சியளிக்கின்றது.

தற்போது இரண்டாவது தடவையாக இந்தப் பாடசாலையைக் கட்டியெழுப்பும் முயற்சியில் பாடசாலை அதிபர் செபமாலை அல்பிரட் ஈடுபட்டுவருகின்றார்.இவ்வாறே முல்லைத்தீவு வலயத்தைச் சேர்ந்த கள்ளப்பாடு பாடசாலை மற்றும் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை ஆகியனவும் முழுமையாக அழிவுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவற்றைக் கட்டி எழுப்புவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.தேவேந்திரன் கூறுகின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply