தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு இரு வருடங்களுக்குள் தீர்வு 60 – 75 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
நீதிமன்றங்களில் பெருந்தொகையாகக் குவிந்து கிடக்கின்ற வழக்குகளை இரண்டு வருடத்திற்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நீதியமைச்சர் அதாவுத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலதிக நீதிமன்றங்களை இரண்டு வருடங்களுக்கென மாவட்ட ரீதியில் அமைத்துத் தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அமைச்சர்; இதுவரை காலம் உச்ச நீதிமன்றங்களில் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட மனித உரிமை தொடர்பான வழக்குகளை எதிர்வரும் காலங்களில் மாகாண, மேன் முறையீட்டு நீதிமன்றங்க ளிலும் விசாரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே நீதியமைச்சர் அதாவுத செனவிரட்ன இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
வழக்கு விசாரணைகளின் தாமதம் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில் 60 மேல் நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்தொகையை 75 ஆக அதிகரிப்பதற்கான திருத்தமே இச்சட்டமூலத்தினால் கோரப்படுகிறது. குவிந்து கிடக்கின்ற வழக்குகளைத் தீர்ப்பதற்காக வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியுள்ளோம். இவற்றின் மூலம் வழக்கு விசாரணைக ளைத் துரிதப்படுத்த முடியும்.
தற்போது தொழில் நியாயாதிக்கச்சபையின் பிணங்குகள் நீதிமன்றங்களுக்கு வருவதால் வழக்கு விசாரணைகளின் தாமதத்திற்கு அதுவும் ஒரு காரணமாகின்றது. தொழில் நியாயாதிக்கச் சபைகளை சகல நகரங்களுக்கும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
வழக்கு விசாரணைத் தாமதங்களை நிவர்த்திக்கும் வகையில் பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர், சட்டத்தரணிகள் உட்பட சம்பந்தப்பட்டோர் கூடி ஆராய்ந்து அவற்றைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சில வழக்கு விசாரணைகளின் தாமதத்திற்கு பகுப்பாய்வுப் பிரிவினரின் நடவடிக்கையும் காரணமாகிறது. இவற்றைச் சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டமா அதிபரின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவாகரத்து தொடர்பான வழங்குகளும் அதிகரித்து வருகின்றன. இதன்போது பிளவுகளின்றி மீள சேர்த்துவைப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறும்போது இத்தகைய பிரச்சினைகள் குறையுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
விஹாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்குகள் ஆயிரத்துக்கு மேல் உள்ளன. மஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் தற்போது அரை நாட்களே நடைபெறுகின்றன. இதன் நேரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வாறாயினும் சட்டமா அதிபர், சட்டத்தரணிகள், நீதிபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடக்கும் வழங்குகளை இரண்டு வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரி வித்தார்.
சில வழக்குகளுக்கு 40 வருடத்தின் பின்னரே தீர்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகைய தாமதம் காரணமாக வழக்குத் தொடுநர்களுக்கு நீதி கிட்டாமல் போகின்றன. சிறுவர் நீதிமன்றம் அமைப்பது மற்றும் மத ஸ்தாபனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு புதிய நீதிமன்றங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத் தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply