வவுனியா வர்த்தகர் போஸ் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட சம்பவம் தொடர்பாகக் இருவர் கைது; மேலும் மூன்று பேரை தேடி வலை விரிப்பு
வவுனியா வர்த்தகர் போஸ் என்றழைக்கப்படும் மாரிமுத்து கதிர்காமராஜாவைக் கடத்திச் சென்று கப்பம் வசூலித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சுதாகரன் மயூரன், கணேசமூர்த்தி பிரபாகரன் ஆகிய இருவரையும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகரிடமிருந்து 6 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றபின்னர் அவரை கடத்தல்காரர்கள் விடுதலை செய்திருந்தனர். இது தொடர்பாகக் கடத்தப்பட்ட வர்த்தகரை விசாரணை செய்து தகவல்களைப் பெற்றதன் பின்னர் கடத்தல்காரர்களைத் தேடி பொலிசார் வலை விரித்திருந்தனர்.
யுத்தம் முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியிருந்த நிலையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதைப்போன்று கடந்த மாதம் 23 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தக் கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து வவுனியா வர்த்தகர்கள் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஒருநான் அடையாள கடையடைப்பை மேற்கொண்டிருந்தார்கள். அத்துடன் கடத்தல், கப்பம்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்ன இரண்டுவார காhலத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன்கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேரை தாங்கள் தேடி வருவதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகள் தொடர்வதாகவும் வவுனியா பொலிசார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வர்த்தகரைக் கடத்தியது மட்டுமல்லாமல், வேறு பல கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குத் தொடர்பிருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் பொலிசார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திBoth comments and pings are currently closed.