தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் அழைப்புக்கு கூட்டமைப்பிடம் இருந்து பதில் இல்லையாம்
தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து இதுவரையில் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி யுமான இரா. சம்பந்தன் நாட்டில் இல்லாத காரணத்தாலும் அவர் நாடு திரும்பியதும் அழைப்புக் கடிதத்தின் பிரதியை நேரடியாக அவரிடம் கையளித்து அழைப்பு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி., ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எப். ஆகிய ஒன்பது தமிழ்க் கட்சிகள் இந்த அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகும். இந் நிலையில் பாராளுமன்றத்தில் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் அது வலுவடைந்த அமைப்பாக தோற்றம் பெறும் என்பதுடன் சாதிக்கக் கூடிய சக்தியையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையாகவும் அமைந்துள்ளது.
இதற்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம் மேலும் விபரிக்கையில், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஒன்பது அரசியல் அமைப்புகள் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டன.
இதன் போது தமிழ் மக்களின் அபிலாஷைகள் அரசியல் எதிர்காலம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகள் சுதந்திரமான வாழ்க்கை ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இந்த அரங்கத்தின் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்பது வலியுறுத்தப்பட்டது. இதனடிப் படையில் மேற்படி அரங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்காக உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுப்பதென தீர்மானித்து அன்றைய தினம் சமூகமளித்திருந்த ஒன்பது கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கையொப்பமிடப்பட்ட அழைப்புக் கடிதம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் அந்த அழைப்புக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி மட்டக்களப்பில் கூடுவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
இது இவ்வாறிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் தற்போது வெளிநாடு சென்றிருப்பதாலும் அவர் இலங்கை திரும்பியதும் ஏற்கனவே விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதத்தின் பிரதியொன்றை கையளித்து நேரடியாக அழைப்பு விடுப்பதற்கும் தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply