மன்னாரில் ஐவரின் உயிரைக் குடித்திருக்கும் “டெங்கு’ ஒரு பார்வை
மன்னாரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முழு மூச்சாக முன் னெடுக்கப்பட்டு வரும் நிலை இரவு பகலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. பொது மக்களின் பங்களிப்பு இருக்கின்றதோ இல்லையோ படைத்தரப்பினர், பொலிஸார் அரச திணைக்களங்கள் மற்றும் அரசு சாராக அமைப்புக்களினால் மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னாரில் இதுவரையிலும் இடம்பெற்று வந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பாரிய வெற்றியை அளிக்காத நிலையில் இவ்வேலைத்திட்டம் தொடர்பில் வடமாகான ஆளுநர் மேஜர் ஜெனரல் பு.யு சந்திரசிறி நேரடியாக ஆராயும் பொருட்டு மன்னாரில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கின்றார்.
மன்னார் மாவட்டத்தில் வெகுவாக பரவி வரும் டெங்கு நோயின் காரணமாக இதுவரையில் 05 பேர் மரணமாகியிருக்கின்றனர். இதனை அடுத்து டெங்கின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்படவேண்டிய விசேட நடவடிக்கைகள் தொடர்பிலேயே மேற்படி அவசர கலந்துரையாடல் அண்மையில் (04.08.2010) மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வட மாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரஸ்ரீ அவர்களின் தலமையில் இடம்பெற்றிருக்கின்றது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலஸ் பிள்ளை மன்னார் பிரதேச செயலாளர்கள், படைத்தரப்புக்களின் உயரதிகாரிகள் மன்னார் அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், திருமதி. யூட் ரதனி, மலேரியா தடுப்புப்பிரிவிற்குப் பொறுப்பான வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகளும்; கலந்து கொண்டிருக்கின்றனர்.
இடம்பெற்றிருக்கும் கலந்தரையாடலின் போது டெங்கின் தாக்கத்தை கட்டுப்படுத்தக்கூடியவிதமான வேலைத்திட்டங்கள் எந்த மட்டத்தில் இருக்கின்றது என்பது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வட மாகான ஆளுநர் கேட்டறிந்திருப்பதோடு டெங்கின் தாக்கம் மரணம் மட்டும் சென்றிருப்பது தொடர்பில் தமது கவலையையும் தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துச்செல்லும் டெங்கின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் மரணத்தையும் கட்டுப்படுத்தக்கூடியதான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தேவையான அனைத்து வளங்களையும் பயன் படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் ஆளுனர் அவர்கள் பணிப்புரைகளை விடுத்திருக்கின்றார்.
மன்னாரில் ஏற்பட்டிருக்கும் டெங்கு நோயின் தாக்கத்தினை இல்லாது செய்யும் வேலைத்திட்டங்கள் பல மன்னார் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதம் இறுதியிலும், இம்மாதத்தின் தொடக்கத்திலும் மன்னார் பொதுவைத்தியசாலையிலும் அதனை கட்டுப்படுத்தக்கூடியதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் பிராந்தியத்திற்குப்பொறுப்பான படைத்தரப்பின் கட்டளையிடும் அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக 215 வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி விக்கும் லியனகே மற்றும் சிவில் நிர்வாக அதிகாரி கேனல் நலிந்த மகாவித்தாரன ஆகியோரின் வழிகாட்டலுடன் மன்னார் நகர படைப்பிரிவினரால் மன்னார் பொதுவைத்தியசாலையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில்
அனுமதிக்கப்படுபவர்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் பெரியோர் என அனைத்து நிலையினரும் உள்ளடக்கப்பட்டாலும் பெரும் பாலும் டெங்கின் தாக்கத்தின் காரணமாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே மன்னார் பொதுவைத்தியசாலைக்கு டெங்கு எனும் சந்தேகத்தில் வரும் நோயாளர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றது. எனவும் இதற்கென குழந்தை மருத்துவ நிபுணர், மற்றும் பொது மருத்துவ நிபுணர் ஆகியோரை பெரதெனியாவிற்கு அனுப்பி தற்போதைய டெங்கு நோயின் தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்கக்கூடியதான புதிய யுக்திகளையும் அவற்றை கையாள்வது தொடர்பிலும் பயிற்று வித்து எடுத்திருப்பதாக வைத்திய அத்தியேட்சகர் எஸ். றோய் பீரீஸ் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மன்னார் வைத்தியசாலை வளாகத்தினுள் நோய்பரவக்கூடிய இடங்கள் என அடையாளம் காணப்படும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நுளம்புகளைக் கட்டுப்படுத்தக்கூடியதான புகையூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பூர்த்தியடைந்திருப்பதாகவும் வைத்திய சாலையின் அனைத்து நோயாளர் பராமரிப்பு விடுதிகளிலும் உள்ள படுக்கைகளுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார். மன்னாரில் தற்போது டெங்கின் தாக்கம் அதிகரித்திருப்பதோடு அது மரணம் மட்டும் சென்றிருப்பதானது மக்களிடையே ஒருவித பீதிநிலையையும் தோற்றுவித்திருக்கின்றது. இதன் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களைப் பார்வையிடுவதற்குக்கூட உறவினர்கள் தயக்கம் காட்டுகின்ற போதும் மன்னார் வைத்திய சாலையில் பணியாற்றுகின்ற அனைத்துத்தரப்பினரும் அர்ப்பணிப்போடு செயலாற்றுவதாக தெரியவருகின்றது.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் பெருகி வரும் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் நகரம் 12 வலயங்களாக பிரிக்கப்பட்டு புகையூட்டப்படுகின்ற வேலை திட்டங்கள் ஆரம்பிகப்பட்டிருக்கின்றது. வலயம் ஒன்றிற்கு புகையூட்டுவதற்கு 1600 லீற்றர் மண்ணெண்ணை 300 லீற்றர் பெற்றோல், 600 லீற்றர் டீசல் தேவைப்படும் எனவும் ஒவ்வொரு வலயத்திற்கும் மூன்று தடவைகள் புகையூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இது தொடர்பில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டெங்கு ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்தினை அமுல் படுத்தும் பொருட்டு சில அதிகாரிகளை அனுபவத்தின் அடிப்படையில் வடமாகான ஆளுனர் விசேடமாக நியமித்திருப்பதாகவும் தெரிகின்றது. இதன் படி டெங்கு ஒழிப்புத்திட்டத்திற்கான உள்ளுராட்சி உதவி ஆனையாளராக வவுனியா உள்ளுராட்சி உதவி ஆனையாளர் அர்ச்சுதன் அவர்களும், சுகாதார சேவைக்காக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மன்னாரில் பல்வேறு அதிரடி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் அதிகாலையிலும் மாலை நேரங்களிலும் டெங்கு நுளம்புகளை இல்லாது செய்யும் இரசாயன கிருமிநாசினி விசுறும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதற்காக தன்னார்வ தொண்டு அமைப்புக்களின் உதவியுடன் ஒலிபெருக்கிகள் மூலம் டெங்கு ஒழிப்பு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்கள் பாடசாலைகள் கல்லூரிகள் என்பவற்றிலும் சிரமதான வேலைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதேவேளை டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசசார்பற்ற அமைப்புகளும் தமது ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் வவுனியாவிலிருந்து விசேட குழுவொன்று வருகைதந்திருப்பதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை ஜனாதிபதியின் சுற்றறிக்கையின்படி வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இம்மாதம் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில்; 2ஆம் திகதி சகல பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும், டெங்கு ஒழிப்பு சிரமதானங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இதேவேளை எதிர்வரும் 9ஆம் திகதி வர்த்தக நிலையங்களிலும், 21ஆம் திகதி வீடுகள், வீதிகளிலும் 28ஆம் திகதி ஆலயங்கள், கோவில்களிலும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply