அரசுடன் இணைந்ததால் மலையகத்தில் அச்சநிலை : திகாம்பரம் தெரிவிப்பு

மலையக மக்கள் தமது தனித்துவமான கட்சியாக இ.தொ.காவை வளர்த்தெடுத்தார்கள். அந்த தனித்துவத்தன்மையை தமது சுயலாப நோக்கங்களுக்காக அரசியல் அடமானம் வைத்து அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டு மக்களின் அரசியலை மலினப்படுத்தி வரலாற்றுத் துரோகம் செய்தவர்கள் இ.தொ.காவினர் என்பதை அதன் தேசிய அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் புரிந்து கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தான் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு குறித்து இ.தொ.கா. தேசிய அமைப்பாளர் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கையிலேயே திகாம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“மலையக மக்களுக்கான தனிப்பெரும் அரசியல் சக்தியாக மக்கள் இ.தொ.காவையே காலாகாலமாகத் தெரிவு செய்து வந்தனர். ஆனால் இ.தொ.கா. மலையக மக்களின் ஏகோபித்த ஆணையை அமைச்சுப் பதவிக்காக அடகுவைத்து நடத்திய கட்சித் தாவல்கள்தான் மக்கள் காட்டிக் கொடுப்பும் துரோகமும் ஆகும்.

இ.தொ.காவின் இத்தகைய மக்கள் துரோக செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து மலையக மக்களின் அரசியல் விடிவுக்காக போராடிய இலங்கைத் திராவிட இயக்கத் தலைவர் அமரர் இளஞ்செழியனின் பாசறையில் வளர்ந்த ஜெகதீஸ்வரன் போன்றவர்கள் இ.தொ.காவுக்கு தாவியது போன்று மக்களுக்கும் கொள்கைக்குமாக செய்த துரோகம் வேறெதுவும் இருக்க முடியாது.

2004ஆம் ஆண்டு எட்டு உறுப்பினர்களோடு நாடாளுமன்றம் நுழைந்த இ.தொ.கா. எந்த அணியில் போட்டியிட்டு வந்தது என்பதையும் பின்னர் எங்கு மாறியது என்பதையும் ஜெகதீஸ்வரன் மறந்து விட்டாரா?

அவர் 2004இல் ஐக்கியத் தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கூச்சலிட்டார். பின்னர் அவர் ஜனாதிபதியானதும் இ.தொ.கா. தலைவருக்கும் தெரியாமல் ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவிக்கு இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியவர்தான் ஜெகதீஸ்வரன்.

பின்னர் அவரது தலைவரிடம் மன்னிப்புக் கேட்டுத் தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டது நினைவில்லையா? அந்த அமைச்சுப் பதவியினூடாக மக்கள் சார்ந்த எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்காத ஜெகதீஸ்வரனுக்கு இவையெல்லாம் நினைவிருக்க வாய்ப்பில்லைதான்.

அரச இயந்திர உபகரணத் திணைக்களத்தின் உப தலைவராக அவர் அரசாங்கத்திடம் சலுகை பெற்று வாழ்ந்ததுதான் மக்கள் துரோகச் செயல் என நினைவு படுத்த விரும்புகிறேன்.

நான் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியை ஆதரித்தவன். ஆனாலும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அந்த அரசாங்கத்தில் ஒட்டிக் கொள்ளாமல் இ.தொ.கா. முன்னெடுத்துவரும் பிற்போக்கு அரசியல் கலாசாரத்திற்கு எதிராக மாற்று அரசியல் சக்தியை கட்டியெழுப்பியவன். நான் அமைச்சுப் பதவியை வாங்கிக்கொண்டு அரசுக்கு ஆதரவு வழங்குபவன் அல்லன். நம்பி வாக்களித்த மக்கள் நாடிவரும் உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு உபாயமாகவே இதனைப் பார்க்கின்றேன்.

அரசியல் ரீதியாக பலமாக இருந்த காலத்தில் மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய அழுத்தங்களைக் கொடுத்துச் செயற்படாது அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டவர்கள் இன்று எமது இணைவினால் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்களின் வரலாற்றுத் தவறுகளை மக்கள் மறந்துவிடவில்லை”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply