புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும்

தடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப் பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர் களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.

அத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் அவர் வலி யுறுத்தினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் – முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற

விசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்களே தவிர எந்தக் குற்றமும் அறியாதவர்கள். அவர்கள் உடலால் சரணடைந்திருந்தாலும் அவர்கள் உணர்வால் சரணடையவில்லை. அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தால், அவர்கள் சமூகமயப் படுத்துவார்கள்.

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் எமது மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த மண்ணில் வாழ வேண்டும். இது எமது நாடு. எமது மண். நாம் இந்த நாட்டையே நேசிக்றோம். நான் இந்த நாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்.

வடக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படாத வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எமது பிரச்சினை 50 வருடம் பழைமை வாய்ந்தது. இன்னமும் தீர்வு காணப்படவில்லை” என்று குறிப்பிட்ட ஆனந்த சங்கரி பாதிக்கப்பட்டவர் களுக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ், சிங்கள மொழிகளைப் பாடசாலை மட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றதுடன் ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதற்காக இந்தியா விலிருந்து ஆசிரியர்களைத் தருவிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த எஸ். எல். குணசேகர, “புலிகள் இயக்கத்திற்கும் ஜே. வி. பி. யினருக்கும் வேறுபாடு கிடையாது. இவர்களும் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆனால், இரு அமைப்புக்களின் ஒழுங்கு நடைமுறையே மாறுபட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டினார். ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்றும் நாளையும் வவுனியாவில் நடைபெறும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply