இலங்கை அகதிகள் குறித்து கனேடிய அரசுமீது லிபரல் கட்சி குற்றச்சாட்டு
கனடா வந்த சேர்ந்த இலங்கை அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் மைக்கேல் இனகடீப் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சன் சீ கப்பல் தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு கனடாவை வந்து சேர மூன்று மாதங்கள் பிடித்தன. இந்த நாட்களில் கப்பல் கனடாவை நோக்கியே வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் கனடா ஏன் இந்த விடயத்தைத் தீவிரமாக ஆலோசனைக்கு எடுக்கவில்லை என மைக்கல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது அகதிகள் கனடாவுக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், அவர்களைத் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் விசாரணைகளின் போது இலங்கையின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மைக்கேல் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளால் பயிற்றப்பட்ட சுமார் எண்ணாயிரம் போராளிகள் கனடாவில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மார்டின் கொலகொட்டின் தகவலை ஆதாரம் காட்டி இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. கனேடிய அரசாங்கத்தின் குடிவரவு சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. இதனை புலிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கொலகொட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது கனடாவுக்கு வந்துள்ள இலங்கை அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது, புலிகளுக்கு புகலிடம் வழங்குவதற்கு சமமானதாகும் என கொலகொட் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply