அடுத்த மாதத் துவக்கத்தில் இலங்கை செல்கிறார் இந்தியப் பிரதிநிதி
இலங்கையில் போரினால் பாதிக்பப்பட்ட தமிழ் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதி அடுத்த மாதத் துவக்கத்தில் இலங்கை செல்லவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். புதன்கிழமை மாலை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட இந்தியா விரும்புகிறது என்றும் அதுபற்றி தமிழக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் திருப்தியளிக்கிறதா என்று கேட்டபோது, அதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருவதாக அவர் தெரிவித்தார்
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மட்டுமே போதுமானது இல்லை என்றும் அங்கு மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
வேளாண்மை, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் சீரமைக்கப்பட்டு விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் முதலமைச்சருடன் பேசியதாகத் தெரிவித்தார் நிருபமா ராவ்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர இந்திய அரசு முன்வந்துள்ள நிலையில், முதல் கட்டமாக ஆயிரம் வீடுகளுக்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியத் தூதரக அலுவலகம் திறக்கப்படும் என்று தெரிவித்த நிருபமா ராவ், இலங்கையின் தென்பகுதியிலும் தூதரக அலுவலகம் திறக்கப்படும் என்றும் நிருபமா ராவ் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply