யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களை அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை : ஒஸ்ரின் பெர்னாண்டோ
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்து வது சாத்தியமில்லையென்றும் ஆனால், இராணுவ நிலைகளை மீள ஒழுங்கமைக்க வேண்டுமென்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இராணுவத்தை கொழும்புக்கு மீளப்பெற முடியா தென்றும், வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் படையினர் அவசியமென்றும் தெரிவித்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, இது விடயத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்குத் தாம் உடன்படுவதாகவும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும் போது குறிப்பிட்டார்.
கொழும்பு – 7, ஹோட்டன் பிளேசில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக சாட்சியமளித்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, பலாலி பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முதலாவதாக வகைப்படுத்தப்பட்ட வீடுகளை உடனடியாகக் கையளித்துவிட முடியாது என்றும் அவற்றைப் பாதுகாப்பு கருதி சிறிது காலத்திற்கு வைத்திருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டதோடு, சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடுகளைக் கையளிக்க முடியுமென்றும் கூறினார்.
“போர் நிறுத்த உடன்படிக்கை தோல்விகண்டமைக்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், அதிலிருந்த சில குறைபாடுகளும் போட்டி அரசியல் போக்கையும் விசேடமாகக் குறிப்பிடலாம். எனினும் அதில் இந்தளவுக்கு நெகிழ்வுத்தன்மை இருந்திருக்கக் கூடாது என்று ஜோன் குணரட்ன தனது நூலில் குறிப்பிடுகிறார். அப்போதைய பலவீனமான அரசியல் சூழ்நிலை சமாதானத்திற்குச் சாதகமானதாக இருக்கவில்லை.
அதனைவிட அது ஓர் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட முரண்பாடு. இளைஞர்கள் தான் இராணுவத்துடன் போரிட்டார்கள். ஆனால், இளைஞர்களைப் பற்றி இரு தரப்பினரும் கரிசனை கொள்ளவில்லை. வவுனியாவில் புலிக்கொடி ஏற்றுவது போன்ற சிறு சிறு விடயங்களில் தான் புலிகள் அக்கறை செலுத்தினார்கள். அவர்களின் அரசியல் செயற்பாடு தொடர்பில் உடன்படிக்கையில் சரியான விளக்கம் இருக்கவில்லை.
என்றாலும் போர் நிறுத்த உடன்படிக்கை யைப் பூரணமாக நான் குறை கூறமாட்டேன். அப்போதைய அரசியல், பொருளாதார சூழ்நிலையில் அதனைவிட சிறந்த வழி இருக்கவில்லை. உதவி வழங்கும் நாடுகள் 4.5 பில்லியன் டொலர் உதவி வழங்க முன்வந்தன. பொருளாதார மீட்சி ஏற்பட்டது. இடம் பெயர்ந்தவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் நாடு திரும்பினார்கள். இலங்கை பற்றி வெளிநாடுகளில் நிலவிய தப்பபிப்பிராயம் நீங்கியது.
யாழ்ப்பாணத்தில் மொத்த தேசிய உற்பத்தி 10% ஆக அதிகரித்தது. எவ்வாறாயினும் எப்போதுமே சந்தேகமான சூழல் தான் நிலவியது.
இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் முழுமையான நம்பிக்கை இருக்கவில்லை. புலிகளைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தனியான இறைமை, தனியான பொலிஸ் படை, கடல் பிராந்தியம் தேவையென்றே கூறி வந்தார்கள். போர் நிறுத்த கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுள் பலமானவர்களும் இருந்தார்கள். பலவீனமானவர்களும் இருந்தார்கள். வன்முறைகளுக்கு நடவடிக்கை எடுக்க எந்த வழிமுறையும் இருக்கவில்லை. சர்வதேச சமூகமும் பெரிதாக அக்கறை எடுக்கவில்லை.
சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பை அமைச்சர் மிலிந்த மொறகொடவே பிரேரித்திருந்தார். அப்போதைய செயற்பாட்டுக்கு ஊடகங்கள் எதிர்மறையான கருத்துகளையே வெளியிட்டன. ஆனால், நான்காவது கட்ட ஈழப் போரின் போது ஊடகங்கள் ஆதரவாக செயற்பட்டன” என்று தெரிவித்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, மீள்குடியேற்றம், நல்லிணக்கத்தை நோக்கிய அரசின் செயற்பாடுகளுக்குப் பரிந்துரைகளையும் முன் வைத்தார்.
“பலாலி பாதுகாப்புப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் அநீதியானதாகும். அதுபோல் பாதிக்கப்பட்ட வீடுகளை, சுனாமி மீள்கட்டுமானத்தைப் போன்று மீளமைத்துக் கொடுக்க வேண்டும். எந்தவித பாரபட்சமுமின்றி இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நிவாரணமளிக்க வேண்டும். மக்கள் இழந்துவிட்ட முக்கிய ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். வடக்கில் கோயில்கள், தேவாலயங்களுக்குத் தற்போது எல்லைகள் கிடையாது.
எனவே, அவற்றை அளவீடு செய்து கையளித்துவிட வேண்டும். இல்லையேல் பிற்காலத்தில் பிரச்சினை ஏற்படலாம். புனர்நிர்மாணப் பணிகளில் அரசாங்கம், வெளிநாட்டுத் தூதரகங்கள், செல்வந்தர்கள் இணைந்து செயற்படலாம். ஐக்கியத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த திறந்த கலந்துரையாடல் அவசியம். அதுவே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.
ஆணைக்குழு: “போர் நிறுத்த உடன்படிக்கையை அன்ரன் பாலசிங்கத்திடம் ஆலோசித்து நோர்வே அனுசரணையாளர்கள் தயாரித்ததாக, பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே!”
ஒஸ்ரின் பெர்னாண்டோ: “உடன்படிக்கை வரைவுக்குழுவில் நான் இடம் பெற்றிருக்கவில்லை. எனினும் அதனை அரசாங்கத்துக்குச் சாதகமான ஓர் உடன்படிக்கையாகத் தயாரித்திருந்தால், புலிகள் இணங்கி வந்திருக்கமாட்டார்கள். ஓர் அடிப்படை ஆவணமாகவே அதனைப் பயன்படுத்தினோம். அதே உடன்படிக்கையில் ஜனாதிபதியும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தாரே!”
ஆணைக்குழு: “கருணா அம்மான் பிளவு பற்றி?”
“அது பற்றி எனக்கொன்றும் தெரியாது. என்னிடம் ஆலோசிக்கப்படவில்லை. அதுவிடயத்தில் நான் மாறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன். ஆனால், சில ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை செலுத்தினார்கள். என்றாலும் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிய கருணா அம்மானே தீர்மானித்திருந்தார். நான் ஒருமுறை அவரைச் சந்தித்தபோது மட்டக்களப்புக்குத் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்று தேவை என்றார். வரதன் என்ற உரை பெயர்ப்பாளருடன் அவரைச் சந்தித்திருந்தேன். இரண்டாவது தடவை நான் அது பற்றிக் கேட்ட போது “ரி. எஸ். இடம் (தமிழ்ச் செல்வனிடம்) கேட்க வேண்டும்” என்றார். ஆனால், தமிழ்ச்செல் வன் வெளித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தார்”.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply