சுற்றுலா சபையினூடாக 16 ஹோட்டல் திட்டங்கள் : லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

30 வருட யுத்தம் முடிவடைந்துள்ளதால் பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாமென்ற அறிவுறுத்தல்களை வாபஸ்பெற்றுள்ளன. தற்பொழுது எந்த நாடும் இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்யக் கூடாது என்று அறிவிப்பதில்லையென பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

யுத்தம் முடிவடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. 2009 உடன் ஒப்பிடுகையில் 2010 மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 48.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது : தற்பொழுது இலங்கையில் 14,800 ஹோட்டல் அறைகளே உள்ளன. 2016 ஆம் ஆண்டாகும் போது இதனை 40 ஆயிரமாக அதிகரிக்க உள்ளோம். இதற்காக இலங்கை சுற்றுலா சபையினூடாக 16 ஹோட்டல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 418 அறைகள் கொண்டதாக இவை அமைக்கப்படும்.

இது தவிர பாசிக்குடா சுற்றுலா பிரதேசத்தில் 1000 அறைகள் கொண்ட 13 ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. கல்லடியில் 350 அறைகள் கொண்ட இரு ஹோட்டல்களும் பெந்தொட்டையில் 250 அறைகள் கொண்ட ஹோட்டலொன்றும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இலங்கை பற்றி சர்வதேச மட்டத்தில் பிரசாரம் செய்யவும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சி. என். என். மற்றும் பி. பீ. சி. தொலைக்காட்சிகளினூடாக பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலா முகவர்களுடன் இணைந்து மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள இலங்கை தூதரகங்களுடன் இணைந்து இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அந்த நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் ஹோட்டல் கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்து அமைதி நிலை ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விமானப் பயணங்களின் தொகையும் அதிகரித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply