நாமெல்லோரும் மக்கள் சேவையாளர்களன்றி பொது மக்களை நிர்வகிக்கும் அதிகாரிகளல்லர் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஆசியாவிலேயே அரசியல் சீரழிவற்ற வலுவான ஸ்திரத்தன்மை மிக்க நாட்டைக் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் தெரிவித்தார்.

“நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். நீங்கள் மக்கள் சேவைக்காக நியமனம் பெற்றிருக்கும் பிரதிநிதிகள். நாமெல்லோரும் மக்கள் சேவையாளர்களன்றி பொது மக்களை நிர்வகிக்கும் அதிகாரிகளல்லர் என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கத்தின் 28 வது வருடாந்த பொதுக் கூட்டம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாம் மூன்றிலிரண்டு பெரும் பான்மை கொண்ட அரசாங்கத்தை அமைத்துள்ளோம். இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது.

நீங்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக கடமையாற்றக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம். அதற்குரிய சக்தியும் உங்களிடமுள்ளது. அதே நேரம் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டம் பொது மக்களையே இலக்காகக் கொண்டிருக்கின்றது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கம் ஒரு பக்கமும், அரச சேவை மற்றொரு பக்கமும் இருக்க முடியாது. அரசாங்கமும், அரச துறையும் இரண்டாக செயற்பட முடியாது. நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது அரச சேவையை சுயாதீனமாக்கி விட்டு சும்மா இருக்கவும் முடியாது. நாமெல்லோரும் பொது மக்களுக்காக சேவை செய்ய இருப்பவர்கள் என்பதை ஒருபோதும் மறந்து செயற்பட முடியாது. பொது மக்களின் சேவையாளர்கள் என்ற வகையில் உங்களிடம் பொறுப்பு உள்ளது.

நாட்டை ஆட்சி செய்யும் போது எம்முடன் மிகவும் நெருங்கி கடமையாற்றும் பிரிவினர் தான் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளாவர். இந் நாட்டில் அரசியல் தலைமைத்துவத்திற்கும், மக்களுக்கும் மிகவும் முக்கிய தரப்பினராக இருப்பவர்களே நிர்வாக அதிகாரிகள்.

அன்று அரசாங்க அதிபர்கள் கடிதங்களை எழுதி கையெழுத்திடும் போது கீழ்ப் பணிந்த சேவையாளர்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள் இது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் இன்று மாவட்ட செயலாளர்களோ, பிரதேச செயலாளர்களோ இவ்வாறு கையெழுத்திடு வதை நான் காணவில்லை. நீங்கள் மக்கள் சேவையாளர்கள் என்ற நிலையிலிரு ந்து இப்போது விலகி விட்டீர்களா என்பதையும் நானறியேன். நீங்கள் அவ்வாறு குறிப்பிட்டு கையெழுத்திடாவிட் டாலும் நீங்கள் மக்கள் சேவையாளர்களாகவே இருக்கின்aர்கள்.

அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் பொது மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியவர்கள். அரச நிர்வாக சேவை மிகவும் பொறுப்பானது. உங்களிடம் சேவை பெறவருக்கின்ற பொது மக்கள் மீது நீங்கள் அன்பு காட்ட வேண்டும். அவர்களோடு கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்களது பதிலில் அவர்கள் திருப்தியோடு திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும்.

கடந்த முப்பது வருடங்களாக அரச சேவை கணக்கில் எடுக்கப்படாத ஒரு துறையாக இருந்தது. உலகில் ஏற்பட்ட வெவ்வேறு வளர்ச்சிகளின் காரணமாக அபிவிருத்தியின் முக்கிய பங்காளியாக தனியார்துறையே கருதப்பட்டது. இதனால் அரசதுறை தனியார் துறைக்கு பலியிடப்பட்டது. பிரதேச செயலகங்களின் நிர்வாக செயற்பாடுகளை கூட தனியார் துறையினரிடம் வழங்கப்பட வேண்டும் என்ற அபிப்பிராயமும் ஒரு காலத்தில் நிலவியது.

முழு உலகமும் ஒரு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது நாம் 2005 ஆம் ஆண்டில் முதற்தடவையாக எமது பயணத்தை நாட்டைக் கருத்தில் கொண்டு மாற்றியமைத்தோம். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசதுறை வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை மஹிந்த சிந்தனையில் தெளிவாக குறிப்பிட்டோம். அதன் படி 2005 ம் ஆண்டு முதல் அரச சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இப்போது அரசதுறை வலுவான துறையாக விளங்குகின்றது.

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பெரும் தடையாக இருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டியுள்ளோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போன்று கடந்த மூன்று நான்கு வருடங்களில் லட்சக்கணக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை கிராம மட்டத்தில் செயற்படுத்தியுள்ளோம்.

இன்று அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவென 250 பில்லியன் ரூபாவையும் ஓய்வூதியம் வழங்கவென 100 பில்லியன் ரூபாவையும் நாம் செலவிடுகின்றோம். இதனை இந் நாட்டு மக்களுக்காக நாம் செலவிடுகின்றோம்.

சுனாமி, வெள்ளம், சுறாவளி அனர்த்தங்களின் போதும், புலிகளின் பிடியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு தேடி தப்பி வந்த போதும் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். இதனை நாம் மறந்து விடவில்லை. தப்பி வந்த மக்களில் ஒருவர் கூட ஒரு வேளையும் உணவின்றி இருக்க இவர்கள் இடமளிக்கவில்லை.

தொலை தொடர்பு சாதனங்கள் பாரிய வளர்ச்சி பெற்றிருக்கும் ஒரு நாட்டில் கடிதமொன்றுக்கு பதிலளிப்பதற்கு 14 நாட்கள் எடுக்கப்படுவது நாட்டை முன்னேற்றுவதற்கா அல்லது பின்னோக்கி தள்ளுவதற்கா இந்த நிலைமை தொடர இடமளிக்க முடியாது. நாட்டின் துரித அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் வகையில் நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார். இந் நிகழ்வில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா, திறைசேரி செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்கா உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply