வைகோவை அதிரவைத்த கே.பியின் குண்டு
கே. பி என்ற குமரன் பத்மநாதன் தூக்கிப் போட்ட ஒரு குண்டு வைகோவின் காலடியில் வெடித்திருக்கின்றது.
புலிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது யுத்தநிறுத்தம் ஏற்படுவதை வைகோ தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டார் என்று இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கே. பி கூறியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு வைகோவை நெருக்கடியான ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கின்றது. சுய அரசியல் லாபத்துக்காகவே வைகோ இப்படிச் செய்தார் என்று கருணாநிதி பக்கத்திலிருந்து ஒரு குரல் எழுகின்றது. யுத்தநிறுத்தம் ஏற்பட்டால் அதற்கான கெளரவம் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் கிடைத்துவிடும் என்பதற்காகவே வைகோ தடையாகச் செயற்பட்டார் என்ற ஒரு கருத்து இப்போது தமிழ்நாட்டில் வலம் வருகின்றது. இதன் நதிமூலம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பணிமனையான அண்ணா அறிவாலயம்.
தமிழ் நாட்டில் அடுத்த வருடம் மே மாதம் சட்ட சபைத் தேர்தல் நடக்கவிருக்கின்றது. இந்த நேரத்தில் இப்படியான குற்றச்சாட்டு தன்னைப் பாரதூரமாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்த வைகோ கே. பியின் குற்றச்சாட்டை ஆக்ரோஷமாக மறுக்கிறார்.
கே. பியின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கின்றதா அல்லது வைகோ வின் மறுப்பில் உண்மை இருக்கின்றதா என்பதில் இப்பத்தி அக்கறை செலுத்தவில்லை. தனது மறுப்பு அறிக்கையில் வைகோ கூறிய ஒரு விடயம் உதாசீனப்படுத்த முடியாதது.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் நடேசனுக்கும் தனக்குமிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பற்றித் தனது மறுப்பு அறிக்கையில் வைகோ குறிப்பிட்டிருக்கின்றார். யுத்தம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் புலி இயக்கத் தலைவர்களுடன் வைகோ தொடர்பு கொண்டிருந்தார் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.
யுத்தத்தின் போது புலிகள் பல்லாயிரக்கணக்கான சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருந்தார்கள். அவர்கள் யுத்த பூமியிலிருந்து வெளியேறுவதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை. தடையையும் மீறி வெளியேற முற்பட்டவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். இந்த மனிதாபிமானமற்ற செயலை நாகரிக உலகம் வன்மையாகக் கண்டித்தது. புலி இயக்கத் தலைவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடிய வைகோ சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருக்க வேண்டாம் என்று கூறியிருந்தால், இலங்கைத் தமிழரில் அவருக்குப் பற்றும் பாசமும் உண்டு என்று நம்பலாம். கூறுவில்லையே.
சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக வைத்திருந்ததை நியாயப்படுத்தும் வகையிலேயே வைகோ தமிழ்நாட்டு மேடைகளில் பேசியிருக்கின்றார். இலங்கைத் தமிழ் மக்களில் வைகோவுக்கு இம்மியளவும் அக்கறை இல்லை என்பதற்கு இது சின்ன உதாரணம்.
இவரது அக்கறையும் பாசமும் புலிகள் மீதுதான். இது நட்பின் பாசமா அல்லது நன்றிக்கடனா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply