மோதல் மனப்பாங்கை விட்டொழித்து உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள்: குமரன் பத்மநாதன் (கே.பி)

பிரபாகரனுக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ‘டெய்லிமிரர்’ ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:-

கேள்வி : அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான , குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை, பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால் இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

பதில் : நான் கூறுவது உண்மையானது. இது மிகவும் எளிமையான கதை….. எமக்கிடையில் எந்த விதமான உடன்பாடும்; இல்லை. எம்மிடையே இருந்தது புரிந்துணர்வு மட்டுமே. நேர்மையான புரிந்துணர்வு. நாம் இருவரும் சில பொது இலக்குகளை கொண்டுள்ளோம். எனவே நாம் அந்த பொது நோக்கங்களுக்காக இணைந்து வேலை செய்கின்றோம். இதுதான் எம்மிடையிலான உடன்பாடு. வேறேதுமில்லை.

கேள்வி: தயவுசெய்து இதை இன்னும் விளக்கமாக கூறமுடியுமா? இந்தக் கருத்துடன்பாடு என்னவென்று குறிப்பிட்டுச் செல்லுங்கள்.

பதில் : தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இப்போது முடிந்துவிட்டது. யுத்தத்தை திட்டமிட்டு ஒருங்கிணைந்து நடத்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இப்போது வேறு பாத்திரமொன்றை ஏற்றுள்ளார். அவருக்கு சமாதானத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியும் வரக்கூடிய வன்முறைக் கிளர்ச்சிகளை தடுக்க வேண்டியும் உள்ளது. யுத்தத்தால் உருவான பிரச்சினைகளுக்கு இணக்கமான முறையில் தீர்வுக்காண நிறையவே செய்யவேண்டியுள்ளது என்பதை அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் உணர்ந்துள்ளனர். முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மீள்குடியமர்த்தப்படும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். வழமை நிலை திரும்ப வேண்டும். ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை விரும்புகின்றனர்.

அதே சமயம் நானும் இந்த பிரச்சினைகள் பற்றி கரிசனையாக உள்ளேன். இயன்றளவு விரைவாக இளைஞர்களும் யுவதிகளும் விடுவிக்கப்படுவதை நானும் விரும்புகின்றேன். இவர்களுக்கு புதுவாழ்வு வழங்க வேண்டும்.

இடம்பெயர்ந்து மீள்பவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும் என நான் விரும்புகின்றேன். இதானால்தான் இந்த விடயங்களில் எம்மிடையே உடன்பாடு காணப்படுகின்றது. இந்த விடயங்களில் ஓரளவு ஈடுபடுவதற்கு எனக்கு பாதுகாப்பு செயலாளர் ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றார். இதுதான் எமது கருத்துடன்பாடு அல்லது உடன்பாடு கண்ட விடயம்.

கேள்வி: ஆனால், இந்த விடயங்களில் ஈடுபடுவதற்கு மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இன் முன்னாள் தலைருக்கு இப்படியான வாய்ப்பு ஏன் வழங்கப்படுகின்றது என்பதே பலருக்கு புதிராக உள்ளது.?

பதில் : பாதுகாப்பு செயலாளர் அல்லது அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் அல்லது ஒரு உத்தியோகத்தரே இதற்கு பதிலளிக்க மிகப்பொருத்தமானவர் என நான் நினைக்கின்றேன். எனது பார்வையில் அல்லது அரசாங்கத்தின் சிந்தனையில் பின்னணியில் என்ன உள்ளது என நான் நினைப்பதை வைத்துக்கொண்டு மட்டும்தான் என்னால் பதிலளிக்க முடியும்.

கேள்வி: சரி. அந்த விதத்திலேயே கூறுங்கள். இந்த வாய்ப்பு உங்களுக்கு ஏன் வழங்கப்பட்டது எண்ணுகின்றீர்கள் என்று எனக்குக் கூறுங்கள்?

பதில் : அவர்கள் ஒரு சிக்கலான, இக்கட்டான நிலைமையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன். அவர்கள் இடம் பெயர்ந்தவர்களையும் தடுப்புக்காவலில் உள்ளவர்களையும் இயன்றளவு விரைவாக புனர்வாழ்வு அளிக்க அல்லது விடுவிக்க விரும்புகின்றனர். இது தாமதாமாக ஆக, சர்வதேச விமர்சனமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அதே சமயம் இன்னொரு பக்கத்தில் அவர்கள் பாதுகாப்பு என்ற பார்வையில் நோக்கும்போது எச்சரிக்கையாகவும் செயற்படுகின்றனர். பிரிவினை வாதம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் வகையில் அல்லது அரசியல் சார்ந்த வன்முறை மீண்டெழும் வகையில் உள்நோக்கம் கொண்ட பகுதியினரால் இந்த மீள்குடியேற்றப்பட்ட விடுவிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படக்கூடாது என அவர்கள் எண்ணுகின்றார்கள். இதனால்தான் அரசாங்க அதிகாரங்கொண்டோர் கவனமாக உள்ளனர். இதனால் விடயங்கள் தாமதமாகின. இந்த மெதுவான நகர்வு அரசாங்கம் மீதான விமர்சனத்துக்கும் வழிவகுத்தது.

எனவே, அரசாங்கம் பாதுகாப்பு நலன்களை பேணும் அதேசமயம் இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகாண உதவக்கூடிய வழிவகைகளை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் நான் வருகிறேன் என நான் நினைக்கிறேன்.

இந்த விடயங்களில் ஒரு அறிய பாத்திரத்தை வகிக்க அவர்கள் எனக்கு ஒரு சந்தரப்பத்தை தருகின்றனர். இது இராமாயணத்தில் கடலுக்கு குறுக்காக அணைகட்ட உதவிய அணிலின் பாத்திரம் போன்றதாகும். இது எனது வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒன்றை செய்வதற்கு எனக்கு வாய்ப்பை அளிக்கின்றது. எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

கேள்வி : ஆனால் உங்களை ஏன்? ஒரு அரசு சாரா நிறுவனம் அல்லது அரசு சாரா நிறுவனங்களின் தொகுதியிடம் அல்லாமல் உங்களிடம் ஏன் வழங்கப்பட்டது? ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள தமிழ் கட்சிகளிடம் இது இல்லை?

பதில் : ஏன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இப்படியான பாத்திரம் வழங்கவில்லை என்பது பற்றி நீங்கள் கேட்டீர்கள். மீண்டும் சொல்கிறேன், நான் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு, நான் என்ன நினைக்கின்றேன் என்பதை மட்டும்தான் நான் கூறமுடியும்.

கடந்த காலத்தில் பெற்ற விரும்பத்தகாத அனுபவங்கள் காரணமாக அநேகமான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் நம்பவில்லை என நான் நினைக்கின்றேன். இதனால்தான் பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்படுகிறது என நான் நினைக்கின்றேன். தமிழக்கட்சிகளும் முன்னர் கிடைத்த வாய்ப்புகளை தவறாக பயன்படுத்தினர் அல்லது துஷ்ப்பிரயோகம் செய்தன.

இதனால் அவர்கள் மீதும் நம்பிக்கையற்று உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களது பிரச்சினை பாதுகாப்பு மற்றும் அரசியல் என்பவற்றுடன் தொடர்புறுகின்ற, மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய விடயமாக உள்ளது.

விமர்சனங்கள் வருகின்றபோதும் அரசாங்கம் இந்த விடயத்தில் எந்தவித்திலும் ஆபத்துக்கும் முகங்கொடுக்கும் நிலை வருவதை விரும்பவில்லை. பழைய புலி உறுப்பினர்களுடன் கலந்து பழக சகல நிறுவனங்களையும் அதுமதித்து, பாதுகாப்பு சிதைவடையும் ஆபத்துக்கு முகங்கொடுக்கும் நிலைமை ஏற்படுவதுடன் ஒப்பிடப்படுமிடத்துதான் விமர்சனத்துக்கு உள்ளாவதே மேல் என அவர் நினைக்கின்றார். இப்படியான நிலைமையில் எனக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. புனர்வாழ்வுக்கு தயாராக்கப்படும் முன்னாள் புலிகளுடனும் வேறு பிரயோசனப் படக்கூடிய சிலருடனும் கலந்து பழகுவதற்கு என்னை அனுமதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது..

அவர்கள் என்னை நம்புகின்றனர். அத்துடன் நான் அவர்களிடம் பிடிப்பட்டுள்ளதால் என்னையிட்டுப் பயப்பட வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனது மக்களுக்கு, குறிப்பாக முன்னைநாள் புலி உறுப்பினர்களுக்கு சேவை செய்யக்கிடைத்த இந்த வாய்ப்பை நான் விருப்போடு ஏற்றுக்கொள்கிறேன்.

கேள்வி : இந்தவகையில் உங்களுக்கு உற்சாகம் அளிப்பது என்ன?

பதில் : முன்னாள் புலித் தலைவர்களில் மிக மூத்தவராக நான் இப்போது இருக்கின்றேன் என நினைக்கின்றேன். இன்றைய தமிழ் மக்களின் பரிதாப நிலையை காணும்போது நான் மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளாகின்றேன். இந்த இளைஞர் யுவதிகளின் கதியை பார்க்கும்போது எனக்கு மிகுந்த கவலையாகவும் துன்பமாகவும் இருக்கிறது.

இந்த பிள்ளைகளில் பலர் தமது விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது.

வன்னிப்பிரதேச சாதாரண மக்களை (சிவிலியன்) காணும்போது நான் பெரிதும் கழிவிரக்கம் கொள்கின்றேன். அவர்கள் ஒரு காலத்தில் செழிப்போடு வாழ்ந்தவர்கள். இப்போது போரின் காரணமாக துன்பகரமான வறுமையில் உள்ளனர். இதனால் தான் நான் அவர்களுக்கு இயன்றளவு உதவி செய்து சிறிதாவது பிராயச்சித்தம் செய்ய விரும்புகின்றேன்.

இன்னுமொரு காரணம் உள்ளது. நான் சென்ற வருடம் கேள்விப்பட்ட கதை. பிரபாகரனும் வேறு தலைவர்களும் சென்ற மேமாத நடுப்பகுதியில் கூடிப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தில் “எமது மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் என்ன நடக்கும்?” என ஒருவர் கேட்டார். அதற்கு “கே.பி. இருக்கிறார். அவர் மக்களையும் உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்வார்” பிரபாகரன் என கூறினாராம்.

சில மாதங்களுக்கு முன் இது உண்மையில் நடந்த சம்பவம்தான் என்றும் பிரபாகரன் இவ்வாறு வெளிப்படையாக என்னைக் குறிப்பிட்டார் எனவும் உறுதி செய்யும் என்று எனக்கு கிடைத்தது.

எனக்கு பொறுப்பளிக்கப்பட்ட இறுதிக்கட்டம் இந்த மக்களை கவனித்து கொள்வதுதான், இந்த வகையில் எனது உறுதியை வலுப்படுத்தியுள்ளது.

இதுதான் நான் ஊக்கத்துடன் இருக்கக் காரணம் நான் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தை (NERDO) தோற்றுவித்தேன். இது ஒழுங்கு முறையாக ஜுலை 06, 2010 இல் பதிவு செய்யபட்டது. எமக்கு வடக்கு கிழக்கில் நடமாடவும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுடனும் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருடனும் கலந்து பழக பாதுகாப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.

கேள்வி: NERDO பற்றி பேசமுன் மிகச்சொற்ப காலத்தில் NGO அரச சார்பற்ற நிறுவனம் என்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைத்ததாகத் தெரிகிறது. NERDO வுக்கு பாதுகாப்பு அனுமதியும் நடமாட்ட சுதந்திரமும் கிடைத்துள்ளது. இது உயர்மட்டங்களில் ஆதரவு இல்லாது சாத்தியமாகியிருக்காது. பாதுகாப்பு செயலாளரின் ஆசீர்வாதத்துடன் தானே NERDO இந்த அங்கீகாரத்தையும் நடமாட்ட சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டது?

பதில்: ஆம் நாம் சகல விதிமுறைகள் நடைமுறைகளுக்கூடாகவும் சென்று விண்ணப்பித்தோம். ஆனால் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவின்றி இவ்வளவு விரைவான அனுமதி கிடைத்திருக்கும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி: முன்னைய விடயத்துக்கு மீண்டும் போக அனுமதியுங்கள். கோட்டாபய ராஜபக்ஷவுடனான உங்கள் விசேடமான உறவின் காரணமாக மட்டுமே, நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவராக இருந்த போதும் நீங்கள் சில செயல்களில் சுதந்திரத்தை அனுபவிக்க முடிகின்றது என்பது தெட்டத் தெரிகின்றது. நீங்கள் முன்னர் கூறியதுபோல உங்களுக்கிடையே உடன்பாடு எதுவுமில்லை. சில தொடர்புடைய மக்கள் நேய நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே உங்களிடையேயான கருத்துடன்பாடாக இருந்தது. இப்படியான மிகவும் நல்ல உறவு எப்படியான சூழலில் பரிணமித்தது? தொடர்ந்து வளர்கின்றது என நீங்கள் விளக்குவீர்களா?

பதில்: நல்லது. நான் எப்படி மலேசியாவில் பிடிப்பட்டேன்; கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன். எமது முதல் சந்திப்பு எவ்வாறு இருந்தது என்பன பற்றி முன்னரே கூறியிருக்கிறேன். அதன்பின் தொடர்ந்து வந்த சந்திப்பில; மூன்றாவது என்றுதான் நினைக்கின்றேன் . கோட்டாபய ராஜபக்ஷ ஒட்டுமொத்தமாக இந்த நிலைமைப்பற்றி நான் என்ன நினைக்கின்றேன். நான் எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகின்றேன் என்பது பற்றி நேரடியான கேள்விகளைக் என்னிடம் கேட்டார்;.

அப்போது நான் என்னைப் பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது என்றும் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்குவது இனிமேல் முடியாதது என்பதை பூரணமாக உணர்ந்துவிட்டேன் என்றும் தெளிவாகக் கூறினேன். மக்களி;ன் கதிபற்றி நான் மிகவும் குற்றவுணர்வுடன் உள்ளேன் என்றும் எனக்கு ஒரு வாய்ப்புத் தரப்படுமானால் நான் இந்த மக்களுக்கு சிறு அளவிலாவது குறைந்த பட்சம் பிராயச்சித்தம் என்ற வகையில் உதவி செய்ய விரும்புகிறேன் என்று கூறினேன். அப்போது பாதுகாப்பு செயலாளர் தானும் இடம்பெயர்ந்தோரை விரைவில் விடுவித்து மீள்குடியேற்றம் செய்யவும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் விரும்புவதாகக் கூறினார். இந்த வகையில் காரியங்களை விரைவுப்படுத்த நம்பத்தகுந்த ஆட்கள் தனக்கு தேவைப்படுவதாகவும் கூறினார். இந்த செயன்முறையில் தனக்கு உதவ நான் விரும்புவேனா என என்னி;டம் அவர் கேட்டார். நான் ‘ஆம்’ எனக் கூறினேன்.

சில நாட்களின் பின் இராணுவ புலனாய்வு தலைவர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண எனது வேண்டுகோளை தானும் பாதுகாப்பு செயலாளரும் விரிவாக ஆராய்ந்ததாகவும் அப்போது ஒரு சாதகமான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதன்பின் இந்த தொடர்செயற்பாட்டில் பங்குக் கொள்ளும் வகையில் சுதந்திரமான செயற்பாட்டுக்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது..

கேள்வி: நீங்கள் ஆலோசகராக ஆக்கப்பட்டீர்களா?

பதில்: நீங்கள் கேட்பது போல அது முறைசார்ந்தாகவோ அல்லது உத்தியோக பூர்வமானதாகவோ இருக்கவில்லை. ஆனால், சில தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் என்னுடன் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் தடுப்பு காவலிலிருந்த உறுப்பினர்களுடனும் வடக்கிலிருந்த சிலருடனும் கலந்து பழகவும் நான் அனுமதிக்கப்பட்டேன்.

கேள்வி : நேரில் சென்று பேசவா?

பதில் : இல்லை. நேரடியாக அல்ல. முதலில் தொலைபேசி மூலம் மட்டும்தான். பின்னர் தடுத்துவைக்கப் பட்டிருந்தவர்களின் பெற்றோரின் பிரதிநிதிகளை வடக்கிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரவும் அவர்களை சந்திக்கவும் முடிந்தது. அப்படியான ஒரு சந்திப்பின்போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றிக் கூறிக் கவலைப்பட்டனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவரிடம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சாதகமான நடவடிக்கையை எடுக்கும்படி பாதுகாப்பு செயலாளரிடம் அவரால் வேண்டு கோள் விடுக்க முடியுமா எனக்கேட்டேன். இதை அவர் செய்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவர்களை விடுவிக்க கொள்கையளவில் உடனடியாகவே சம்மதம் தெரிவித்தார். பின்னர் கட்டங்கட்டமாக விடுவி;க்கப்பட்டனர். இப்போது எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுப்புக்காவலில் இல்லை. அதுபோலவே புனர்வாழ்வு அளிக்கப்படுவோரும் வகைரீதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

கேள்வி: உங்களுக்கு உத்தியோக ரீதியான பதவி எதுவுமில்லை. ஆனால் குறித்து வைக்கப்பட்ட உத்தியோகபூர்வமல்லாத விசேடமான ஒருவகை பாத்திரம் வகிக்கின்றீர்கள் என நான் கருதுகிறேன். இதனால்தான் இந்த விடயங்களில் இணைந்து செயற்படவும் நல்லதொரு பாத்திரத்தை வகிக்கவும் உங்களால் முடிந்தது என நான் கருதுகிறேன்.,

பதில் : ஆம். அது நான் NERDO வை உருவாக்கமுன். இப்போது இவ்வாறான விடயங்களில் நான் NERDO வை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

கேள்வி: அப்படியானால் அரசாங்கமே உண்மையில் பொறுப்பாகவிருந்து கொள்கைகளை தீர்மானித்து, அவற்றை செயற்படுத்தியது. ஆனால், ஆலோசகர் என்ற வகையில் ஒரு மேலதிகமான ஒரு பாத்திரத்தை நீங்கள் வகித்தீர்களா?

பதில் : அப்படியேதான். ஆம், அரசாங்கம்தான் அதை கையாண்டது. உதாரணமாக,முன்பு புலி உறுப்பினராகவிருந்து புனர்வாழ்வு வழங்கப்படுவோர் புனர்வாழ்வு ஆனையாளர் நாயகத்தின் நிறுவகத்தின் கீழ் வந்தனர். இந்த விடயத்தில் மிகப்பொருத்தமான ஒருவரைத்தான் அரசாங்கம் நியமித்துள்ளது என்பதை நான் கூறியாக வேண்டும். இந்த வேலைக்கு மிகப் பொருத்தமானவர்தான் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க. பாதுகாப்பு வதிவிடப் புனர்வாழ்வு மையத்தில் (Pயுசுஊ) தங்கவைக்கப்பட்டிருப்போரின் நலனில் அக்கறையும் அர்ப்பணிப்பும் அவரிடம் நிறையவே உண்டு.

கேள்வி: அப்படியானால் இந்த விடயங்களில் நீங்கள் நீங்கள் செய்தது என்ன அல்லது செய்துகொண்டிருப்பது என்ன?

பதில் : என்னிடம் ஒரு கருத்து அல்லது அபிப்பிராயம் கேட்கப்படும்போது நான் எனது ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். சில ஏற்கப்பட்டுள்ளன. வரையப்படும் திட்டங்கள் பற்றி கேட்கப்படும் போது நான் எனது அபிப்பிராயங்களை கூறுவேன். ஒரு பிரச்சினை அல்லது நியாயமான ஒரு வேண்டுகோள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் சம்பந்தப்பட்டால் நான் தொடர்புடைய உத்தியோகத்தர்களுடன் நேரடியாக அல்லது வேறுவழியில் தொடர்பு கொண்டு இதை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன். நானும் சில விடயங்களை முன்னெடுத்து ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். இந்த விடயங்களில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உத்தியோகத்தர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்த துரதிஷ்டசாலியான மக்களின் கதியையிட்டு நிறைந்த அனுதாபங்கொண்ட நேர்மையான ஆட்களாக உள்ளனர். இதனால் கருத்துகள் ஆலோசனைகளை அதிஉயர் அளவில் உள்வாங்குபவர்களாக உள்ளனர். இதனால் விடயங்களை செய்துகொள்ளுதல் ஒரு போதும் பெரிய பிரச்சினையாக இல்லை. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கு நாமும் உதவி செய்கின்றோம். அதிகமாக இது NERDO ஊடாகவே செய்யப்படுகின்றது.

கேள்வி: ஆனால் ஆட்களை விடுவிப்பதிலும் புனர்வாழ்வு அளிப்பதிலும் மெதுவான முன்னேற்றமே காணப்படுகிறதே? ஏன்?

பதில் : நான் அங்கு அவதானித்ததிலிருந்து இந்த பிரச்சினைகளை வினைத்திறனுடனும் விரைவாகவும் தீர்க்க வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் பக்கத்தில் நேர்மையான சிந்தனை உள்ளதை காண முடிகிறது. அவர்கள் இரண்டு விசாலாமான வகையினரை இனங்கண்டுள்ளனர். ஒரு வகையினர் ஏதாவது வன்முறையில் ஈடு;பட்டவர்கள் எல்.ரீ.ரீ.ஈ இல் பல வருடங்களாக இருந்தவர்கள், கரும்புலி அல்லது தற்கொலைத்தாக்குதல் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள் என சந்தேகிக்கப் படுவர்களை உள்ளடக்கிய் பகுதியினர் ஆவர். இந்த வகையில் கிட்டத்தட்ட 1400 பேர் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

ஏனையவர்கள் மென்பகுதியினர் என்ற வகையில் அடங்குவர். இவர்கள் எர்.ரீ.ரீ.ஈ உடன் சொற்பகாலம் அனுபவம் கொண்டவர்கள் அல்லது அண்மைக்காலத்தில் கட்டயாமாக சேர்க்கப்பட்டவர்கள் அல்லது வங்கி, பொலிஸ் , போன்ற எல்.ரீ.ரீ.ஈ இன் நிர்வாக தொழிற்பாட்டில் சம்பந்தபட்டவர்கள். இவர்கள் எண்ணிக்கை 11000க்கு மேல் உள்ளது. ஆனால் தற்போது 7000-8000 என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இது இவர்கள் ஒரு வகை ஒழுங்கில் விடுவிக்கப்பட்டதன் விளைவாகும்.

இவர்கள் ஒவ்வொருவரையும் கவனிப்பதற்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு தலா 400 ரூபா செலவு செய்கின்றது. அரசாங்கம் நிச்சயமாக இயன்றளவு விரைவில் இவர்களை விடுவித்து, செலவழிக்கப்படும் பணத்தை மீதப்படுத்தவே விரும்பும். ஆனால் நடைமுறைப்பிரச்சினை உள்ளது. நான் முன்னர் கூறியது போன்று உள்நோக்கம் கொண்ட சிலரால் விடுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மீண்டும் வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கப்படலாம் என அரசாங்கம் பயப்படுகின்றது.

இதை தடுப்பதற்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் எவரும் வேலையின்றியோ அல்லது எதுவும் செய்யாமல் சும்மாவோ வேலை இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவது ஒரு வழியாகும். இதற்காகவே தொழில் திறன் செயற்றிட்டங்களை வகுத்து, இவர்களை பயிற்றுவித்து வருகின்றனர். இவ்வாறானவர்கள் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வர். இதனால்தான் மெதுவான முன்னேற்றம் காணப்படுகிறது.

கேள்வி: இருப்பினும் விடுவிப்பதற்கான ஒரு நாள் குறிக்கப்பட்ட ஒரு கால எல்லையை ஏன் வகுக்க முடியவில்லை?

பதில் : நான் ஏற்கனவே சொன்ன காரணங்களால்தான் இது நடக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு செயலாளர் இந்த மென் பகுதியினர் ஆறு தொடக்கம் ஒன்பது மாதங்களுக்குள் பூரணமாக விடுவிக்கப்படுவர் என தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருப்பதை நான் கட்டாயம் சொல்லவேண்டும். இந்த காலக்கெடுவை எதிர்கொள்ளும் வகையில் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நான் நினைக்கின்றேன்.

ஆனால், இந்த பிரச்சினை பற்றி வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன். இவர்கள் விமர்சிப்பதை விட்டு விட்டு நிதி ரீதியாக உதவவேண்டும். முதலீடு செய்யவும் வேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு பயிற்சியும் வேலையும் வழங்க இவர்கள் நிதி உதவி வழங்குவார்களாயின் இவர்களை விரைவில் விடுதலை செய்யலாம். வெறுமனே விமர்சிப்பதற்கு பதிலாக, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருப்பின் நிதி உதவி வழங்குவதன் மூலம் ஏன் விரைவான விடுப்புகளை உறுதி செய்யக்கூடாது. பாதுகாப்பு செயலாளர் இவர்களை இயன்றளவு விரைவில் விடுவிக்கவே விரும்புகிறார்கள் என்பதை எனது அனுபவத்திலிருந்து உறுதியாகக் கூறுகிறேன்.அவரை குறை கூறுவதற்கு பதிலாக ஏன் உதவி செய்து முயன்று பார்க்கக்கூடாது?

கேள்வி: பாதுகாப்புச் செயலரையும் உங்களையும் பற்றி வினவ அனுமதியுங்கள். நீங்கள் அவருடன் எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை தொடர்பு கொள்வீரர்கள்?

பதில்: அது இப்படித்தான். நான் அவருக்கு ஏதாவது தகவல் வழங்க விரும்பினால், எம் இருவருக்கும் இடையில் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஊடாகத் தெரிவிப்பேன். அவரும் இதேபோலத்தான் செய்வார். இதைவிட, இடம்பெயர்ந்தோர், புனர்வாழ்வு அளிக்கப்படுவோர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு நாம் நேரடியாகவும் சந்தித்துள்ளோம். அண்மைக்காலமாக நாங்கள் NERDO வை ஸ்தாபித்தன்பின் பாதுகாப்பு செயலாளர் அதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றார். ஒவ்வொரு வாரமும் எமது முன்னேற்றத்தைப்பற்றி அறிந்து கொள்வார். தேவையானால் அவரின் கீழ் உள்ள அதிகாரிகளை நான் அணுகுவேன்.

கேள்வி: உங்கள் இதயம் தொட்ட விடயம் பற்றிப் பேசுவோம். NERDO பற்றி சொல்லுங்கள். அது எப்படி உருவானது? NERDO ஊடாக நீங்கள் என்ன செய்ய செய்ய எண்ணியுள்ளீர்கள்?

பதில் : முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் வன்னியில் உள்ள இடம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றியும் நாம் பேசிக்கொண்டிருந்த போது இந்த பிரச்சினைகளை கையாள அரசு சார்பற்ற சமூகசேவை நிறுவனம் தேவை என நான் உணர்ந்தேன். இந்த நிறுவனம் அரச கட்டுப்பாடின்றி இயங்க முடியும். ஆனால், இந்த முயற்சிகள் தொடர்பில் அரசின் ஒட்டு மொத்தமான முயற்சிகளுடன் இணைந்து செயற்படலாம். அரசாங்க அதிகாரிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.

எனவே சில ஆயத்தங்களை செய்யத் தொடங்கினோம். ஆனால் விடயங்கள் பெரிதாக நடக்கத் தொடங்கவில்லை. போதிய பணம் இன்மை ஒரு பிரச்சினையாக காணப்பட்டது. பின்னர் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சிலரின் ஒரு வாரகால சுற்றுப்பயணம் இவ்வருடம் ஜுனில் வந்தது.

கேள்வி : குறுக்கீடு செய்வதற்கு வருந்துகின்றேன். அந்த சுற்றுப்பயணம் எப்படி ஒழுங்குபடுத்தப்பட்டது?

பதில் : சில வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு வந்து பார்த்து நேரடியாகவே உண்மை நிலையை அறிந்துக் கொள்வதே இந்தத் திட்டம். முதலில் நாம் இந்த வருகை மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் யுத்த ஆண்டு நிறைவுடன் பொருந்தி வரவேண்டும் என நினைத்தோம். ஆனால், சில காரணங்களாலும் வெள்ள நிலைமை காரணமாகவும் இதை நாம் ஜு10ன் மாத்திற்கு ஒத்திவைக்க வேண்டியேற்பட்டது. முதலில் நாம் 20 பேருக்கு மேல் கொண்டுவர எண்ணியிருந்தோம். 22 பேரின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்தோம். பயண ஒழுங்குகள் தொடர்பான காரணங்களால் தொகையை குறைப்பது நல்லது என கொழும்பிலிருந்து அதிகாரிகள் கருதினர். இதனால் இது 12 பேராக குறைக்கப்பட்டது. ஆனால், கடைசி நேர பிரச்சினைகள் காரணமாக 9 பேர் மட்டுமே வர முடிந்தது.

கேள்வி : ஆக, அது எப்படி நடந்தது? தயவு செய்து NERDO பற்றி மேலும் கூறுங்கள்?

பதில் : வெளிநாட்டில் வசிப்போரின் வருகை எமது திட்டங்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்தது. இங்கு வந்தவர்கள் இருந்த நிலைமை பற்றி நேரடி அனுபவம் பெற்றுக்கொண்டனர். ஒருவரைத் தவிர, மற்றைய யாவரும் உண்மை நிலைவரத்தை விளங்கிக் கொண்டனர். அவர்கள் NERDO இன் தேவையை உணர்ந்துக்கொண்டனர். சிலர் நன்கொடை வழங்கினர். பெரிய தொகையாக அது இல்லாதபோதும் அது விடயங்களை நகர்த்த போதுமானதாக இருந்தது. அரசாங்கம் அவர்களின் வருகைபற்றி திருப்தி அடைந்து NERDO வெற்றியாக வருவது சாத்தியம் என்பதை ஒத்துக்கொண்டது.

வடக்கு மீனவர் சங்கத்தின் சங்கங்களின் சமாஜத்தின் தலைவர் எஸ்.தவரத்தினம் உள்ளார். நான் NERDO இன் செயலாளர்.

கேள்வி : NERDO பற்றி மேலும் விவரங்களை தந்தாலென்ன? விலாசம் , தொலைபேசிகள், வங்கி கணக்குகள் போன்றவை?

பதில் : எமது அலுவலகம் வவுனியாவில் உள்ளது.
விலாசம்: 10, முதலாம் ஒழுங்கை, கதிரேசன் வீதி,
வைரவபுளியங்குளம், வவுனியா.
எங்கள் தொலைபேசி எண்கள் 94244925438. செல்லிட தொலைபேசிகள் 94758998034, 94779376919,
தொலைநகல் : 94242221730.
ஈமெயில் : info@nerdo.lk
எமது இணையத்தளம் www.nerdo.lk.
எமக்கு இரண்டு வங்கிக் கணக்குகள் உள்ளன. பதிவு செய்த பெயர் : North –East rehabilitation & Development Organization கொழும்பில் HSBC கணக்கு உள்ளது. அதன் இலக்கம் 012 -160354-001 குறியீடு HSBC LKLX, வவுனியாவில் கொமர்ஷல் வங்கியில் ஒரு கணக்கு உண்டு. அதன் இலக்கம் 1610046482, குறியீடு CCEYLKLX.

கேள்வி: NERDO வின் செயற்பாடு அமைப்புப்பற்றி மேலும் கூறமுடியுமா?

பதில் : நல்லது. நாம் இப்போதுதான் தொடங்கியுள்ளோம். இப்போது வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன. கரிசனை உள்ளவர்களிடமிருந்து நன்கொடை பெற விரும்புகிறோம். சில நிதிகள் இப்போது கசிய ஆரம்பித்துள்ளன. வவுனியாவில் உள்ள எமது அலுவலகம் மிகவும் எளிமையானது. எமக்கு பெரிய கட்டிடங்களேர் அதிகளவு ஊழியர்களோ கட்டுப்படியாகாது. இங்கு இரண்டு உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒருவர் யாழ்ப்பாணத்தவர் , மற்றையவர் மலைநாட்டைச் சேர்ந்தவர். ஒருவர் அலுவலக வேலைகளை கவனிக்கின்றார். மற்றவர் கள உத்தியோகத்தர் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு பெண் தொண்டர் என்ற வகையில் தட்டெழுத்தாளராக இருக்கிறார். அவருக்கு சம்பளமாக ஒரு தொகை வழங்கப்படுகிறது.

சம்பளமின்றி பகுதிநேர அடிப்படையில் உதவிசெய்யும் சில தொண்டர்களும் உள்ளனர். இவர்களில் அநேகமானோர் எனக்கு தனிப்பட்ட முறையில் – எமது ஊரான மைலிட்டியை சேர்ந்;தவர்கள் அல்லது காங்கேசன்துறை நடேஸ்வராக்கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரி என்பவற்றிலும் பழைய மாணவர்கள் என பலவகையிலும் தெரிந்தவர்கள். சிலர் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் என்னோடு படித்தவர்கள்.

இவர்களில் சிலர் பாடசாலை அதிபர்கள் , அரசாங்க உத்தியோகத்தர்கள் , அல்லது வங்கி ஊழியர்களாவர். நான் 1981 இல் வெளிநாடு சென்றபின் இவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை என்பதை குறிப்பிடவேண்டும.; நான் எல்.ரீ.ரீ.ஈ இல் இணைந்து வேலை செய்தபடியாலும் இவர்கள் இலங்கையில் இருந்த காரணத்தாலும் அவர்கள் பாதுகாப்பு கருதி நான் இவர்களுடன் தொடர்பாடலைத் தவிர்த்தேன்.

இப்போது இவர்கள் என்னோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில சேவைகளை செய்ய முயல்கின்றனர். இதில் 25-30 பேர்வரையில் உள்ளனர். எமக்கு வினைத்திறன் மிக்க தொண்;டர்கள் தேவை. எனவே இது படிப்படியாக அதிகரிக்கும் என நினைக்கின்றேன்.

கேள்வி : NERDO இது வரை செய்தது என்ன? உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

பதில் : எமது முதல்மாத முன்னேற்றம் கொஞ்சமானதே. கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒவ்வொன்றுக்கும் 15, 000 ரூபா வீதம் தவணைப் பரீட்சை வினாத்தாள் அச்சிடுவதற்காக வழங்கினோம். மகாவித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு தமிழ் கலவன் பாடசாலை என்பனவாகும். இங்கு கே. புவனேஷ்வரன் என்னும் வலுக்குறைந்த இளைஞனுக்கு க.பொ.த.(உ.த) பரீட்சைக்கு சென்றுவர உதவியாக 5, 000 ரூபா கொடுத்தோம்.

இதைவிட க.பொ.த (உ.த) பரீட்சைக்கு தயாராகும் புனர்வாழ்வு அளிக்கப்படும் 358 பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் பணிஸும் தேநீரும் வழங்கப்படுகிறது. 28 நாட்களுக்கு இவ்வாறு செய்யப்படும். இதுபோல க.பொ.த (சா.த) பரீட்சை எழுதப்போகும் 119 பிள்ளைகளுக்கும் சில ஆசிரியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பணிஸும் தேநீரும் வழங்குவதற்கான செலவு 450, 000 ரூபாவினை NERDO முழுமையாக செலுத்திவிட்டது.

கேள்வி : ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் சில ஊடக அமைப்புகள் NERDO வை விமர்சிக்கின்றன. இது அரசாங்கம் செய்யவேண்டிய வேலை. இதை நீங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை என கூறுகின்றன.

பதில் : இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால் இங்கு உண்மைநிலை வேறாக உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்த பிரிவினர் போலன்றி நாம் அரசாங்கத்தை தாக்குவதோ அல்லது குறைகளை குத்திக்காட்டிக் கொண்டோ இருப்பதில்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர் போலன்றி இங்கு அடிமட்டத்தில் வேலை செய்யும் நாம் அரசாங்கத்துடன் பங்குதாரர்களாக உள்ளோம்.

இது “நாங்களும் அவர்களும்” என்ற மாதிரி இல்லை. இது “நாங்கள்'” என்னும் நிலைமையாகும். இங்கு அரசாங்கமும் நாமும் ஒற்றுமையாக எமது மக்களுக்கு உதவுவதற்காக எம்மாலானதை அதி சிறப்பாக செய்யவேண்டும். அரசாங்கத்துக்கும் சிலவிடயங்களால் நிதித்தட்டுப்பாடு உள்ளது. அப்படியானால் சும்மா குந்திக்கொண்டிருந்து, அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா?

இப்படிக் கதைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் நினைத்திருந்தால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி புனர்வாழ்வு அளிக்கப்படும் பிள்ளைகளை க.பொ.த( உ.த) பரீட்சைக்கு தோற்றாவிடாமல் தடுத்திருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

கஷ்டங்கள் இருந்தப்போதும் சோதனைகளை எழுத ஒழுங்கு செய்தார்கள். உணவு வழங்கினார்கள். போக்குவரத்து ஏற்பாடு செய்தார்கள். ஆட்களையும் வழங்கினார்கள். அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனமொன்று கற்றல் சாதனங்களையும் மேலதிக ஆசிரியருக்கான செலவையும் எழுதுகருவிகளையும் கொடுத்துதவியது. நாம் இதற்கான ஒழுங்குகளை தளத்திலிருந்து மேற்கொண்டோம். பின்பு NERDO விலிருந்து நாம் பணிஸும் தேநீரும் வழங்கி உதவினோம்.

எனவே, இது அரசாங்கம், அவுஸ்திரேலிய NGO, புலம்பெயர்ந்த ஆகிய மூன்று பகுதியினர்களுக்கு உதவ மேற்கொண்ட கூட்டு முயற்சியாகும். இதில் அரசாங்கம் சிரமத்திலும் செலவிலும் பெரும் பங்கை தாங்கிக் கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் இப்படியான மடத்தனமான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கேள்வி : புலம்பெயர்ந்த இன் எதிர்கால செயற்றிட்டங்கள் எவை?

பதில் : ஆம்; எம்மிடம் நிறைய திட்டங்கள் உண்டு. அவற்றை செயற்படுத்துவதை நோக்கி வேலை செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களில் மேலும் இரண்டு அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

வவுனியா, மன்னார் வீதியில் அன்பு இல்லம் என அழைக்கப்படும் வீடு ஒன்றை அமைப்பது திட்டமிடப்பட்டுகின்ற குறிப்பான ஒரு செயற்றிட்டமாகும். போரினால் அநாதைகளாகிய பிள்ளைகளுக்கும் கை, கால், கண் இழந்தோருக்கும் கவனிக்க யாருமே இல்லாத மிகவும் வயதுபோனவர்களுக்கும் பாதுகாப்பான வதிவிடம் வழங்க விரும்புகிறோம். ஏற்கெனவே கொழும்பிலிருந்து இயங்கும் தமிழ் கத்தோலிக்க கன்னியாஸ்த்திரி ஒருவர் 40 பேரைக் கொண்ட இவ்வாறான இல்லமொன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு உதவி செய்ய சிங்கள கத்தோலிக்க கன்னியாஸ்த்திரிகள் குழுக்களாக வருகின்றனர். நாம் இந்த அருட் சகோதரியுடன் இணைந்து NERDO இன் உதவியுடன் அவரது சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்.

புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் சில இடம்பெயர்ந்தோருக்கும் கூட விஞ்ஞான முறையிலான விவசாயத்தை கற்பிக்கவும் கடைப்பிடிக்கவுமாக 200 ஏக்கர் அளவியல் மாதிரிப் பண்ணை ஒன்றை அமைப்பதும் எமது இன்னொரு திட்டமாகும். கை கால் இல்லாதவர்களையும் வறுமையில் வாழும் வயோதிபர் ஆகியோரையும் பெருமளவில் கொண்ட வவுனியா நகரத்திலிருந்து 25 மைல் தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றையும் நாம் இனங்கண்டுள்ளோம். சமுதாயமைய திட்டமாக இந்த கிராமத்தை வேலை வாய்ப்பும் கவணிப்பும் வழங்கும் மாதிரிக் கிராமமாக உருவாக்க நாம் திட்டமிட்டு வருகின்றோம்.

இன்னொரு திட்டம் அம்புலன்ஸ் சேவை ஒன்றை ஏற்படுத்துவது ஆகும். இலண்டனில் உள்ள ஒரு நலன்விரும்பி ஒரு அம்புலன்ஸ் வாகனம் வழங்க சம்மதித்துள்ளார். இதை நாம் கிளிநொச்சியிலிருந்து இயக்குவோம்.

கேள்வி : இப்படி குறிப்பான செயற்றிட்டங்கள் தவிர விரிந்த அளவில் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி பெருந்திட்டங்களை அமுலாக்கும் எண்ணம் உங்களிடம் உண்டா?

புதில் : ஆம் எமக்கு அந்த எண்ணம் உண்டு. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழாரான ஒரு அறிஞர் ஒருவர் எமது மீன்பிடித்துறையை மீட்டெடுக்கவும் கட்டியெழுப்பவும் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டமொன்றை தயாரித்துள்ளார். மீன்பிடித்துறை யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் கரையோர மீன்பிடித் தொழில் புனருத்தாரண நிகழ்ச்சித்திட்டம் என பெயரிடப்பட்ட ஒரு குறுகியகால செயற்திட்டத்தை Nநுசுனுழு வகுத்துள்ளது. தற்போதுள்ள மீளாய்வு வள்ளங்களை புனரமைப்பு செய்வதும் வலைபோன்ற மீன்பிடி வள்ளங்களை புனரமைப்பு செய்வதும் வலைபோன்ற மீன்பிடி உபகரணங்களை வழங்குவதும் இதனுள் அடங்குகிறது. சரியாக அமுலாக்கப்பட்டால் 3300 குடும்பங்களுக்கு இது முழு வேலைவாய்ப்பை வழங்கும்.

விவசாயம் பால்பண்ணை விலங்கு வளர்ப்பு துறைகளை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒரு அறிஞர் ஏற்கனவே விவசாயத்துக்கான பெருந்திட்டம் ஒன்றை வகுப்பதிலும் செலவை மதிப்பீடு செய்வதிலும் ஈடு;ப்பட்டுள்ளனர். பால்பண்ணை, விலங்கு வளர்ப்பு அபிவிருத்தி திட்டமொன்றை உருவாக்க இன்னொரு அறிஞர் விரைவில் வருவார்.

எமது இன்னொரு திட்டம் தொழில்திறன் கல்வி, தொழில்நுட்ப கல்வி ஆகியவற்றை வழங்கும் பயிற்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகும். ஆரம்பத்தில் முன்னாள் புலி உறுப்பினராக இருந்து, புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு குறுகிய பாடநெறிகள் மோட்டார் பொறிமுறை குழாய் பொருத்துதல் இலத்திரனியல் தரைத்தோற்றக்கலை என பல துறைகளையும் நாம் இந்த குறுகிய கால பாடநெறித் தராதரப் பத்திரங்களை பெறுவோருக்கு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளவும் தேவையெனில் உயர்கல்வியை தொடரவும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எண்ணுகிறோம். இறுதியாக இதை நாம் முழுவசதிகொண்ட தொழில்நுட்பக் கல்லூரியாக விருத்தி செய்ய விரும்புகின்றோம்.

அடுத்த எமது திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலாசார நிகழ்வுகளை தொடராக நடத்துவதாகும். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னைநாள் புலி உறுப்பினர்களே இதில் பங்குப்பெறுவர்.

பிரபலமான சிங்கள திரைப்பட நடிகை அனோஜா வீரசிங்க 60 புனர்வாழ்வு அளிக்கப்படும் புலி உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றார். அவரது அர்ப்பணிப்பு என்னைக் கவர்;ந்தது. எமது பிரபலமான பாடகர்களில் ஒருவாரான சாந்தன் இரண்டு பிள்ளைகளுடன் தடுப்பில் உள்ளார். இவர்கள் உழைப்பை ஒன்று சேர்த்து முன்னாள் புலி உறுப்பினர்கள் பற்றி நல்ல எண்ணத்தை உருவாக்கி சமாதானம் நல்லெண்ணம் பற்றிய செய்தியை பரப்பும் வகையில் கலைவிழாக்களை நடத்தத் திட்டமிடுகின்றோம்.

கேள்வி : இந்த விடயங்களில் அரசாங்கம் எங்கு வருகிறது?

பதில் : நான் முன்பு கூறியது போல நாம் சுயாதீனமாக வேலை செய்வோம். ஆனால் அரசாங்கத்தின் பங்காளராக இருப்போம். அரசின் ஆதரவு அல்லது அனுமதியின்றி வடக்கு கிழக்கில் அல்லது இலங்கையின் எந்த பகுதியிலும் எவரும் தொழிற்முடியாது என்பதுதான் இன்றைய நிலை. வடக்கு கிழக்கில் எமக்கு ஆயுதப்படைகளின் முழு ஆதரவும் தேவை இதுவே யதார்த்தமாக இருக்கும்போது எமது சுயாதீனத்தை தக்கவைத்துக் கொண்டு அரசாங்கத்துடன் ஒத்திசைவாக வேலை செய்ய வேண்டும்.

அரசாங்கம் NERDO வைப் பிரச்சினை அல்லாத ஒன்றாகவே பார்க்கின்றது. அரசாங்கம் இதற்கு உதவி கொடுக்கும். தொடர்பாடலுக்கு அனுமதிக்கும். உதாரணமாக, மாதிரிப்பண்ணை அமைக்க அரசாங்கம் எமக்கு நிலம் தரும். அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் போன்ற திட்டங்களுடன் முடியுமானபோது இணைந்து கொள்ளவும் உதவி பெறவும் NERDO எண்ணுகின்றது.

கேள்வி : உங்கள் திட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப் படுத்த உங்களிடம் வளங்கள் உண்டா?

பதில் : இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நாம் ஆரம்ப விருத்தி நிலையில் உள்ளோம். முதலில் அபிவிருத்தியை பொறுத்தவரையில் எமது மக்கள் பல தசாப்தங்கள் பின்னோக்கிப் போய்விட்டனர் என்பதை அங்கீகரிப்பதற்கு தாமும் யாதார்த்த பூர்வமாக இருக்க வேண்டும். உதாரணமாக, வடக்கில் புகையிரதப்பாதை இல்லை.

எமது சமுதாயம் எமது கல்விப் பாரம்பரியம் பற்றி பெருமைப்பட்டு கொண்டிருந்தது. இன்று எமது பாடசாலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. பிள்ளைகள் மரத்தின் கீழ் குந்தியிருந்து படிக்கின்றனர். பிள்ளைகளில் பலர் வறுமை காரணமாகவும் , சீருடை, காலணி, பாடப்புத்தகம் என்பன இல்லாததாலும் பாடசாலை செல்வதில்லை. நாம் இந்த நிலைமை பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளோம்.

எமது திட்டங்கள் செயலாக வரத்தொடங்கி மக்கள் எம்மைப்பற்றி அறியவரும்போது வெளிநாட்டிலுள்ள எமது தமிழ் உறவுகளிடமிருந்து பெருமளவு உதவியையும் அனுசரணையையும் பெறுவோம் என நாம் நம்புகின்றோம். ஏற்கனவே சில தகுதிவாய்ந்த வெளிநாட்டில் வாழ்வோர் இங்கு வந்து தமது கல்விசார்ந்த, வாண்மை சார்ந்த நிபுணத்துவத்தை கொண்டு அடிப்படையில் வழங்கச் சம்மதித்துள்ளனர். சிலர் விசேட செயற்றிட்டங்களுக்கு நிதி வழங்க ஒத்துக் கொண்டுள்ளனர். NERDO எமது மக்களின் உதவியுடன் படிப்படியாக நன்றாக இயங்கும் என நம்பிக்கையோடு உள்ளேன்.

கேள்வி : ஊடகங்களுடன் நிறையத் தொடர்புள்ள வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் தமது கருத்தை அழுத்திப் பேசவல்ல. ஒரு பகுதியினர் உங்களுக்கும் NERDO வுக்கும் எதிராக நச்சுத்தனமான பிரசாரம் ஒன்றை செய்துக்கொண்டிருக்கின்றனர். உங்களை அரசாங்கத்தின் கைக்கூலி என்றும் NERDO என்பது வெளிநாட்டிலிருந்து தமிழ் மக்களின் பணத்தை வரவழைத்து அரசாங்கத்தின் கஜனாவில் சேர்ப்பதற்கான ஒரு தந்திரம் என்றும் குற்றஞ் சாட்டுகின்றனர். இப்படியான பாதகமான நிலைமையில் நீங்கள் வெற்றி பெறலாம் என நம்புவது எப்படி?

பதில் : ஆம். இப்போதுள்ள நிலைமை பற்றி நீங்கள் கூறுவது சரியே. ஆனால். இது ஒரு தற்காலிகமான நிலைமை என்றுதான் நான் நினைக்கின்றேன். இந்த எதிரான பிரசாரத்தை அவிழ்த்துவிட்டுள்ள பகுதியினர் சிறுபான்மையினரரே. ஆனால் நீங்கள் கூறியதுபோல் வெளிநாட்டுகளில் இவர்களுக்கு ஊடகங்கள் மீது கிட்டத்தட்ட தனியாதிக்கம் உண்டு. இதனால் இவர்களின் உண்மைப் பலத்தைவிட கூடுதலாக இவர்களுக்கு செல்வாக்கு உள்ளது. இருந்தாலும் அவர்கள் சிறுபான்மையினரே. இவர்களது பிரசாரம் பொய்களிலும் தவறான வழிகளிலும் தங்கியுள்ளது.

நான் நம்பிக்கை வைத்திருப்பதும் தங்கியிருப்பதும் சத்தியம் மீதுதான். முதலில் எமது வலையமைப்பில் எமது செயற்றிட்டங்கள் பற்றியும் செலவுகளையும் இ கிடைத்தபணமஇ; செலவு செய்த பணம் என்பவற்றின் கணக்கறிக்கைகயையும் விரிவாக அவர்களது நேர்மையான விசாரணைகளுக்கும் பதிலளிப்போம். நாம் இந்த விடயங்களில் திறந்த தன்மையுடன் வெளிப்படையாக உள்ளோம் என மக்கள் மேலும் மேலும் அறியவரும்போது இந்த பொய்ப்பிரசாரம் நிலைத்து நி;ற்கமுடியாது போகும்.

இரண்டாவதாக, எமது ஆதரவையும் உதவிகளையும் பெற்றக்கொண்டவர்கள் உண்மை நிலைமைப்பற்றி வெளிநாட்டில் வாழும் தமது உறவினரருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பார்கள் என்னும் நம்பிக்கையோடு உள்ளோம். அவர்கள் நேரடியாகவே விடயங்களை அவதானிக்கவும் தமது சொந்த முடிவுக்கு வரவும் உதவ தயாராகவுள்ளோம். எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. எம்மோடு தொடர்பு கொண்டால் வடக்கு கிழக்குக்கு பயணம் செய்ய விரும்புவோருக்கு உதவி செய்யவும் NERDO தயாராகவுள்ளது. தேவையெனில் NERDO வின் பிரதிநிதி ஒருவகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கலாம் எனவும் யோசிக்கின்றோம்.

ஆகவே, படிப்படியாக உண்மை வெல்லும் NERDO வெற்றியடையும்.

கேள்வி : நீங்கள் எப்போதும் நன்மையே நடக்கும் என எண்ணுபவர் என நான் காண்கிறேன். நீங்கள் சில புனர்வாழ்வு அளிக்கப்படுபவர்களுடனான ஒரு சந்திப்பின்போது நம்பிக்கைதான் வாழ்க்கை என கூறும் காட்சியை வீடியோ துண்டம் ஒன்றில் பார்த்தேன். நான் உங்கள் மனோநிலையை விளங்கிக் கொள்கிறேன். ஆனால் இவ்வளவு பயமுறுத்தும் தடைகளையும் மீறி உங்களால் வெற்றியடைய முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில் : பிரபாகரன் என்னிடம் வெளிநாட்டு கொள்வனவு (ஆயுதம் வாங்குதல்) பொறுப்பை 1983 இல் தந்தபோது நான் ஒரு கற்றுக்குட்டியாக இருந்தேன். நான் மிகவும் சாதாரண பின்னணி யிலிருந்து வந்தவன். எனது தந்தை அரசியல்ரீதியாக விளக்கமுடையவராக இருந்தார். ஆனால் அவர் ஒரு சாதாரண மீனவராக இருந்தார். நான் உயர் குழாத்தினர் படிக்கும் பாடசாலைகளில் கல்வி பெறவில்லை. எனது ஆங்கில அறிவு குறைவாக இருந்தது. நான் இலங்கை, இந்தியாவுக்கு வெளியே எங்கும் போயிருக்கவில்லை. எல்.ரீ.ரீ.ஈ ஆயுத வியாபாரத்தில் முக்கியமான எவரையும் அறிந்திருந்த அனுபவமில்லாத இயக்கமாக இருந்தது.

ஆயினும் நான் எனது பகுதியை மெதுவாகவும் நிதானமாகவும் விருத்தி செய்தேன். நாங்கள் ஆயுதங்களை பல்வேறுப்பட்ட மூலங்களிலிருந்து உலகளாவிய ரீதியில் கொள்வனவு செய்து வடக்கு கிழக்கில் கப்பலில் ஒழுங்கு தவறாமல் அனுப்புமளான நிலைமைக்கு எல்.ரீ.ரீ.ஈ இன் சக்தியை வளர்த்தேன். நான் வெளிநாட்டில் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் வரையில் எல்.ரீ.ரீ.ஈயால் யுத்தத்தை வெற்றிகரமாக நீடிக்க முடிந்தது. என்னால் ஆயுதங்களை தொடர்ச்சியாக வாங்கக் கூடியதாக இருந்ததே இதற்கான காரணம்.

சாவையும் அழிவையும் கொண்டுவந்த ஒரு கடமைப் பொறுப்பில் அப்போது என்னால் வெற்றி பெறக் கூடியதாக இருந்தது என்றால் முன்னர் போலல்லாது மக்களையும் வாழ்க்கையையும் அழிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு உதவுவதும் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதுமான இலக்கை கொண்ட இந்தப் புதிய கடைமைப் பொறுப்பில் ஏன் என்னால் வெற்றியடைய முடியாது?

கேள்வி : நீங்கள் மனந்தளர்ந்து போகவேண்டுமென இதைக் கூறவில்லை. அத்துடன் உங்கள் ஆற்றலையும் விசேட திறமையையும் நான் மறுத்துரைக்கவும் இல்லை. ஆனால் இங்குள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் தடுப்புக் காவலில் இருக்கிறீர்கள். சுதந்திர மனிதனாக இல்லை. முன்பு போலன்றி விடயங்களை செய்வதற்கு உங்களால் சுதந்திரமாக நடமாட முடியாது. அதோடு உங்களுக்கு வயது போய்விட்டது. நல்ல ஆரோக்கியத்துடனும் இல்லை. அத்துடன் உங்களுக்கெதிராக அதிதீவிர அமுக்கக் குழு ஒன்று கடுமையாக வேலை செய்கின்றது. இதனால்தான் நான் சந்தேகப்படுகிறேன்.

பதில் : ஒருவி;தத்தில் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நான் வெற்றிப்பெறுவேன் என நினைக்கின்றேன். ஆம், தடுத்து வைத்திருக்கப்பட்டிருப்பதும் காரியங்களை நேரில் போய் செய்வதற்கு பதிலாக தொலைபேசி, ஸ்கைப், இணையம் என்பவற்றை பயன்படுத்த வேண்டியிருப்பதும் விரக்தியடையச் செய்யும்தான். ஆனால் நான் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். நான் தடுப்புக்காவலில் இருக்கக்கூடும். ஆனால் குறைந்த்பட்சம் மக்களுக்காக சிலவற்றை செய்யும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது என நினைப்பதுண்டு.

என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இது எனக்கு வழங்கப்பட்ட மூன்றாவது பெரிய பொறுப்பும் வாய்ப்பும் ஆகும். முதலாவதுதான் பிரபாகரனால் ஆயுதக்கொள்வனவு செய்ய நியமிக்கப்பட்டது. நான் அதில் வெற்றிப்பெற்றேன். இரண்டாவது பொறுப்பு நான் மீண்டும் இயக்கத்தில் இணைந்தபோது யுத்த நிறுத்தமொன்றை கொண்டு வருவதும் தலைமையையும் இயக்கத்தையும் காப்பாற்றுவதாகவும் இருந்தது. நான் அதில் தோல்வி அடைந்தேன்.

இப்போது இது எனது மூன்றாவது பெரிய கடமைப் பொறுப்பு. இதில் எனது நோக்கமும் தூரநோக்கும் மக்களுக்கு உதவுவதாக உள்ளது. நான் ஒரு இயக்கத்துக்கு ஆயுதம் வழங்கவோ அல்லது அதை காப்பாற்ற முயலவோ இல்லை. இந்த முறை நான் மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அவர்களுக்கு உதவுகின்ற உயர்ந்த பெறுமதிமிக்க பொறுப்பில் இருக்கிறேன். எனவே நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்.

கேள்வி : மக்களுக்கு உதவும் உங்கள் இலட்சியத்தில் தடையோ கட்டுப்பாடோ இல்லாமல் நீங்கள் ஈடுபடும் வகையில் உங்களை விடுவிக்கும்படி நீங்கள் ஏன் வேண்டுகோள் ஒன்றை விடுக்கக் கூடாது?

பதில் : இரண்டு காரணங்களால் நான் இப்படியான வேண்டுகோளை விடுக்க மாட்டேன். முதலாவதாக ஆயிரக் கணக்கான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் நான் சுதந்திரமாக இருக்க விரும்பவில்லை. நிலைவரம் முன்னேற்றம் கண்டு முன்னாள் உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் விடுவிக்கப்பட்டு அல்லது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படும் நிலைமை வரும்போது நானும் சுதந்திரமாக இருப்பது பற்றி யோசிக்க முடியும்.

அடுத்த காரணம், இப்படி செய்வது அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏற்கனவே அரசாங்கம் , குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் என் காரணமாக எதிரக்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். இதை மேலும் சிக்கலாக்க நான் விரும்பவில்லை. சரியான நேரத்தில் பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளருடன் ஆலோசித்து எல்.ரீ.ரீ.ஈ பற்றி முழுதான ஒரு கொள்ளைத் தீர்மானத்தை எடுப்பார். எனது கதி என்னவாகும் என்பதை நான் அறியேன். அதுவரை இந்த நிலைமையில் கீழ் எது முடியுமோ அதை நான் செய்வேன்.

ஒரு நன்மையான விடயம் என்னவென்றால் அர்ப்பணிப்பு உள்ள ஒரு அணி NERDO வைச் சுற்றி மெதுவாக உருவாகின்றது. எனவே எனது நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் இந்த அணி உற்சாகமாக வேலை செய்யும். ஆனால் இயலுமாயின் என்னை வவுனியாவில் நிலைப்படுத்தும்படி நான் கேட்டிருக்கிறேன்.

கேள்வி : அரசாங்கம் உங்களை பயன்படுத்திக் கொள்கின்றது உங்களை பின்னர் தட்டிக் கழித்துவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் : நான் நம்பிக்கையில்விசுவாசத்தில் நல்லெண்ணத்தில் வேலை செய்கின்றேன். நான் அப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால், விவாதத்திற்காக அப்படி நடக்கும் என வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட குறைந்தப்பட்சம் இப்போது நான் செய்வது போன்று சிலருக்கு உதவி செய்வதில் வெற்றிக் கண்டிருப்பேன். அது எனக்கு போதும்.

கேள்வி : மறுபுறத்தில் நீங்கள் அரசியலுக்கு வருவதுபற்றி பல தமிழ் அரசியல்வாதிகள் கவலையடைந்துள்ளனர். அப்படியான எண்ணம் ஏதும்?

பதில் : இல்லை. இயலுமாக இருந்தாலும்கூட நான் அரசியலுக்கு வரவிரும்பவில்லை. தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அரசியலை நடத்தட்டும். நான் செய்ய விரும்புவதெல்லாம், புனர்வாழ்வு வழங்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களினதும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரினதும் நலன்களை கவனிப்பதையே. இப்போது எமது மக்களுக்கு தேவையாயிருப்பது அரசியல்வாதிகள் அல்ல. மாறாக மனித நேயர்களே.

கேள்வி : NERDO வடக்கு கிழக்கில் உள்ள சகல மக்களுக்காகவும் உழைக்குமா?

பதில் : அதுதான் எனது நீண்டகால நோக்காக உள்ளது. ஆனால் இப்போதைக்கு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்தோர் மீது மட்டும் எமது கவனத்தைக் குவிப்போம்.

கேள்வி : நாம் நீண்ட நேரம் பேசிவிட்டோம். இன்னும் பேச வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. இன்னொரு நேரத்தில் பேசக் கூடியதாக இருக்கலாம். ஆனால் நாம் முடிக்கும்முன் நீங்கள் இலங்கையருக்கென பொதுவாகவும் தமிழருக்கெனப் குறிப்பாகவும் சொல்ல விரும்பும் செய்தி உண்டா?

பதில் : தொலைதூரத்திலிருக்கும் கனடாவிலிருந்து தொலைபேசிமூலம் இந்த உரையாடலை நடத்தியதற்கு நன்றி. இதை நாம் விரைவில் மீண்டும் செய்யவேண்டும். அப்போது NERDO எவ்வளவு சாதித்துள்ளது என்பதை உங்களுக்கு சொல்லக் கூடியதாக இருக்கும்.

ஆம். என்னிடம் இரண்டு செய்திகள் உள்ளன. முதலாவது எனது தமிழ் உறவுகளுக்கு நான் சொல்வது இதுதான்: போர் முடிந்துவிட்டது. பிரபாகரன் மாற்றும் சிரேஷ்ட தலைவர்கள் எம்மோடு இல்லை. தமிழ் ஈழம் ஒரு தோற்றுப்போன இலட்சியம். ஆயுதப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்னும் பொறுப்பில்லாதவர்கள் கூற்றை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். தயவு செய்து மோதல் மனப்பாங்கை விட்டொழித்து உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமும் வீணான அலங்காரப்பேச்சுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இலங்கைத் தமிழர்கள் ஏனையோருடன் இணைந்து செழிப்புடனும் ஒத்திசைவுடனும் வாழ உதவுங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு இணக்கப்பாடும் ஒத்துழைப்பும்தான் தேவை. மோதலும் முரண்பாடும் தேவையில்லை.

இரண்டாவது செய்தி எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.ஈ ஐ சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துப்போன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு சிரேஷ்ட தலைவர் அல்லது முன்னாள் தலைவர் என்ற வகையில் இதற்காக இலங்கையர்களை எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன். தயவு செய்து எம்மை மன்னித்து சகல இலங்கையருக்குமாக ஒரு நல்ல எதிர்காலத்தை அமைப்பதில் முன்னிற்க எமக்கு உதவுங்கள்.

கேள்வி : இந்த உரையாடலுக்கு நன்றி. உங்கள் நல்ல நோக்கங்கொண்ட முயற்சிகள் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன். தனிப்பட்ட மீட்சிக்கான உங்கள் பயணமும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நீங்கள் உங்கள் சேரிடத்தை அடைவீர்கள் என நான் நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன்.

பதில் : உங்கள் வாழ்த்துக்களுக்கும் நேர்காணலுக்கும் மீண்டும் நன்றி கூறுகிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை.

டி.பி.எஸ் ஜெயராஜ் கூறுகிறார்:

சென்ற வாரம் வெளியிடப்பட்ட இந்த நேர்காணலின் மூன்றாம் பாகத்தில் இரண்டு தவறுகள் நேர்ந்து விட்டன.

முதலாவது. பிரபாகரனின் குடும்பத்தை காப்பாற்றும் பிழைத்துப்போன திட்டத்தின் செலவு பற்றியது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 1.5 மில்லியன் அமெரி;க்க டொலர் என தவறுதலாக கூறப்பட்டிருந்தது. அது உண்மையில் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகவிருந்தது.

இரண்டாவது தவறு முன்னால் எல்.ரீ.ரீ.ஈ இன் அரசியல் பிரிவுத் தலைவரான நடேசனுடன் தொடர்பு கொண்டிருந்த மகேந்திரன் என அழைக்கப்படும் தமிழ் நாட்டு அரசியல்வாதியொருவர் பற்றிக் கூறும்போதும் ஏற்பட்டதாகும்.

இங்கு குறிப்பிடப்பட்ட மகேந்திரன் தமிழ்நாடு மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிச் செயலாளர் சி.மகேந்திரன் ஆவார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட்) இன் அல்லது (CPI-M) இன் தமிழ்நாடு சட்ட சபை உறுப்பினர் கே. மகேந்திரன் என தவறுதலாக கூறப்பட்டிருந்தது. இரண்டு தவறுகளுக்கும் வருந்துகிறோம்.

DBS Jeyaraj can be reached on dbsjeyaraj2005@yahoo.com

(தமிழில்: ந. கிருஷ்ணராசா)

மூலம்/ஆக்கம் : நேர்காணல்


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply