இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவிடம் தமிழ் கட்சிகளின் அரங்கம் ’12 அம்சங்கள்’ முன்மொழிவு

நேற்று காலை (செப், 2)தமிழ் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளிவிவகாரச் செயலர் திருமதி நிருபமா ராவ் அவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியது. இந்திய உயர்ஸ்தானிகர் திரு அசோக் கே காந்தா, துணை ஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி அரசியல் செயலர் திரு அனுரக் ஸ்ரீவத்சவா ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தனர்.

இச் சந்திப்பில் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்புச்செயலாளர் திரு ராஜ்குமார், பத்மநபா ஈபிஆர்எல்எப் இன் செயலாளர் ஸ்ரீதரன், புளொட் அமைப்பின் செயலாளர் சதானந்தன், ஒபர் புனர்வாழ்வமைப்பின் தலைவர் திரு.சந்திரஹாசன், திரு பேரின்பநாயகம் தமிழ் தேசியவிடுதலை முன்னணியின் தலைவர் திரு சிவாஜிலிங்கம், ஸ்ரீரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயராசா, திரு சுரேந்திரன், ஈழவர் விடுதலை முன்னணியின் தலைவர் பிரபாகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் நல்லையா குருபரன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் மட்டக்களப்பில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் கருத்திற்கெடுத்து கொண்ட 12 விடயங்களையும் இந்திய வெளிவிவகாரச்செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அவையாவன:

1. அர்த்தமுள்ள மீள் குடியேற்றம்.

2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள்கட்டுமானம்.

3. உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றுதல்.

4. மக்களின் வாழ்விடங்களில் இராணுவ குடியேற்றங்களைத் தடுத்தல்.

5. முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல்.

6. யுத்தத்தில் உடைமைகளை உறவுகளை இழந்த அங்கவீனர்களான மக்களுக்கு நட்ட ஈட்டைப்பெற்றுக் கொடுத்தல்.

7. வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பேசும்மக்களின் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தளாத்துதல்.

8. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துதல்.

9. மீள் குடியேற்றத்தை வெளிப்படையாகச்செய்வதுடன் அதற்கு மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல்.

10. தடுத்துவைக்கபட்டிருக்கின்ற அரசியல் கைதிகள், இறுதி யுத்த நடவடிக்கையின் போது சரணடைந்த, கைதுசெய்யப்பட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்தல்.

11. இனப்பிரச்சனைத் தீர்விற்கு மாகாண சபைக்கெனப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பில் உள்ள 13வது அரசியல் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல்.

12. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் முஸ்லீம் மலையக கட்சிக்ளை இணைந்துசெயற்படுவது.

இச்சந்திப்பில் கருத்துதெரிவித்த இந்திய வெளிவிவகாரச் செயலர் யதார்த்தபூர்வமாகச் செயற்படுதல் தமிழ்கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டை வலியுறுத்தியதுடன் வடக்குகிழக்கின் சமூகபொருளாதார கலாச்சார அபிவிருத்திப்பணிகள் உட்பட இலங்கை வாழ் மக்களின் நலன்களில் இந்தியா கரிசனையுடன் அக்கறையுடன் செயற்படும் எனவும் தெரிவித்தார். இச்சந்திப்பு சுமார் ஒருமணிநேரம் நீடித்தது.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply