தீர்வுக்காக எதுவும் செய்யாமல் இந்தியாவை எதிர்பார்ப்பது கையறு நிலையின் வெளிப்பாடு
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறி விட்டது என்று கூறுகின்றார் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். பேராசிரியர் சிற்றம்பலம் கல்விமானாக இதைக் கூறுகின்றார் என்பதிலும் பார்க்க அரசியல் வாதியாகப் பேசுகின்றார் என்பதே பொருத்தமானது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உப தலைவர். தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதான பங்காளி என்பதால் பேராசிரியர் சிற்றம்பலத்தின் கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கருத்தாகக் கொள்வதிலும் தவறேதும் இல்லை.
யுத்தம் முடிந்த பின்னராவது இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா அக்கறை செலுத்தவில்லை என்பது பேராசிரியர் சிற்றம்பலம் வெளிப்படுத்திய மனக் குறை.
இந்தியா அளிக்கும் உதவிகள் ஒரு நடைமுறை எல்லைக்கு உட்பட்டவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இடம் பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்துக்கு இந்தியா உதவி யளிக்கின்றது. வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உதவி யளிக்கின்றது. இவற்றை இலங்கை அரசாங்கத்துக்கூடாகவே செய்ய முடியும். இலங்கை அரசாங்கத்தை மீறி இந்தியா தன்னிச்சையாக இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
தேசிய இனப் பிரச்சினையே தமிழ் மக்களின் அடிப்படையான பிரச்சினை. இப்பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அடிக்கடி கோரிக்கை விடுப்பதையும் இவ்விடயத்தில் இந்தியா போதுமான அளவு செய்யவில்லை என்று அவர்கள் குறைபட்டுக் கொள்வதையும் அடிக்கடி அறிகின்றோம். இது தொடர்பாகக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நாம் அவ்வளவு விரைவில் மறந்துவிட முடியாது. இலங்கைத் தமிழ்த் தலைவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோ ளின் விளைவாகவே அந்த ஒப்பந்தம் கைச் சாத்தாகியது. ஒப்பந்தத் தின் பிரகாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண சபை நடைமுறைக்கு வந்தது. அந்த மாகாண சபையைப் பாதுகாப்பதற்குத் தமிழ்த் தலைவர்கள் தவறிவிட்டார்கள். அந்த மாகாண சபை செயலற்றுப் போன தையிட்டுத் தமிழ்த் தலை வர்கள் கவலைப்படவி ல்லை. மாகாண சபையை நிராகரிக்கின்றோம் என்று சில காலத்துக்குப் பின் பகிரங்கமாகவே கூறி னார்கள். ஒவ்வொரு கட் சியும் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு என்ற வட் டத்துக்குள் நின்றே இப் பிரச்சினை யைப் பார்த்தன. இனப் பிரச்சினைக் குத் தீர்வு காணும் முயற்சியில் முதலாவது பிரதான பின்னடைவு இது. இந்தியாவின் உதவியை அப் போது நாம் நிராகரித்துவிட்டோம் என்பதே இதன் அர்த்தம்.
அதன் பின்னரும் தமிழ்த் தலைவர்கள் நிதானமாகச் செயற்படவில்லை. புலிகளின் இந்திய எதிர்ப்புக்குப் பக்கத்துணையாகவே செயற்பட்டார்கள். இந்திய ஆட்சியாளர்கள் மீது பிரா மணிய ஆதிக்கம் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது இத்தலைவர்கள் அதற்கு மெளன அங்கீகாரம் அளித்தார்களேயொழிய அந்தக் குற்றச்சாட்டு தவறானது என்று ஒருவராவது சொல்லவில்லை.
இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இப்போது மீண்டும் இந்தியாவின் பக்கமே தமிழ்த் தலைவர்கள் திரும்புகின்றார்கள். இவர்கள் இந்தியாவிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பது விளங்கவில்லை.
இந்தியாவின் பாத்திரம்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தீர்வு என்றும் பதின் மூன்றாவது திருத்தத்தையோ வேறு அரைகுறைத் தீர்வையோ ஏற்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அடிக்கடி கூறுகின்றார்கள். அதாவது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த முழுமையான அரசியல் தீர்வைத் தவிர வேறு எதையும் ஏற்கும் நிலையில் இவர்கள் இல்லை. இந்தத் தீர்வை அடைவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் இவர்கள் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. இதற்கான செயற்திட்டம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் இந்தியா உதவ வேண்டும் என்று வேண் டுகோள் விடுக்கின்றார்கள்.
இனப் பிரச்சினையின் தீர்வு இந்தியாவின் பொறுப்பு என்பது போல இரு க்கின்றது. இத் தலைவர்களின் நிலைப்பாடு.
தீர்வுக்கான முயற்சியை இலங்கைத் தலைவர்கள் முன்னெடுக்கும்போது இந்தியா அதற்கு உதவ முடியும். இலங்கைத் தலைவர்கள் எதுவுமே செய்யாமல், இந்தியா தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது சிரிப்புக்கு இடமானது.
இவ்விடயத்தில் இந்தியா வகிக்கும் பாத்திரம் சில வரையறைகளுக்கு உட்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் ‘கையை முறுக்கி’ ஒரு தீர்வைத் திணிக்கும் நிலையில் இந்தியா இல்லை. அது சாத் தியமில்லை.
இப்போது பதின்மூன்றாவது திருத்தம் நடைமுறையில் இருக்கின்றது. இதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். அத் திருத்தம் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியதும் அவசியம். இதற்குச் சாதகமான சூழ்நிலை நாட்டில் நிலவுகின்றதா என்பதிலேயே தீர்வு முயற்சி தங்கியுள்ளது. தெளிவாகக் கூறுவதானால், அரசியலமைப்புத் திருத்தத்துக்குச் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் கிடைக்கக் கூடிய சூழ்நிலை நிலவுகின்றதா என்பது பிரதான கேள்வி.
முழுமையான அதிகாரப் பகிர்வு தான் இனப் பிரச் சினைக்குச் சரியான தீர்வாக முடியும். ஆனால் அதிகாரப் பகிர்வுக் கோரிக்கையைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை கணிசமான சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இச் சந்தேகம் ஏற்பட்டதற்குத் தமிழ்த் தலைவர்களே பிரதான காரணம்.
வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பதின்மூன்றாவது அரசிய லமைப்புத் திருத்தம் வந்தது. தனி நாட்டைத் தமிழ்த் தலைவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்று சிங்கள மக்கள் அப்போது நினைத்தார்கள். மாகாண சபையை நிராகரித்ததும் சந்தேகம் தோன்றத் தொடங்கியது. பின்னர் சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வு. அந்தத் தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவாகத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பகிரங்கமாகக் கருத்துத் தெரி வித்தார்கள். பின்னர் அத் தீர்வுத் திட்டம் பாராளுமன்றத்துக்கு வந்தபோது அதே தலைவர்கள் அதை எதிர்த்தது மாத்திரமன்றிப் புலிகளுடன் சேர்ந்து தனிநாட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தலைவர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை தனி நாட்டுக்கான முதலாவது படி என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் வலு வடைந்ததற்கு இவ்வாறான செயற் பாடுகள் காரணமாக இருந்தன. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஆதரவான சக்திகள் தென்னிலங்கையிலும் உள்ளன. அச் சக்திகளுடன் கூட் டாகச் செயற்படுவதற்குத் தமிழ்த் தலைவர்கள் முன்வராததும் சிங்கள மக்களின் சந்தேகத்துக்கு வலு சேர்ந்தது.
சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப் பற்றி அக்கறை இல்லை என்ற மனோபாவத்துடன் செயற் படுவது இனப் பிரச்சினைக்கு அர சியல் தீர்வு காண்பதற்குச் சாதக மானதல்ல. சர்வசன வாக்கெடுப்பு என்ற தடையைத் தாண்டியே அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த முடியும். இந்த யதார்த்தத்துக் கூடா கவே இந்தியா செயற்பட வேண் டியுள்ளது. யதார்த்தத்துக்கு அமைவாக நாங்கள் செயற்படும் போது தான் இந்தியா பயனுறு பாத்திரத்தை வகிக்க முடியும்.
தோற்றுப்போன பாதை
தமிழ்த் தலைவர்கள் செயற்பாடு எதிலும் ஈடுபடாமல் வெறும் பேச்சோடு இந்தியாவை எதிர் பார்த்திருப்பது ஏன் என்ற கேள்வி எழலாம். இவர்கள் பின்பற்றிய பாதை தோற்றுவிட்டதே இதற்குக் காரணம். இதனால் செய்வதறியாது நிற்கின்றார்கள். இத் தலைவர்களின் தூர நோக்கற்ற செயற்பாட்டினால் அரசியல் தீர்வுக்கான போராட்டம் இருபத்தைந்து வருடங்கள் பின்தள்ளப்பட்டுவிட்டது. இன்று அந்த நிலையிலிருந்து தான் தீர்வை நோக்கி முன்னேற வேண்டியுள்ளது.
சமஷ்டியும் தோற்று விட்டது. தனிநாடும் தோற்றுவிட்டது. சமஷ்டிக் கோரிக்கையைக் கருத்தீடுபாட்டுடன் முன்னெடுக்கத் தவறியதாலேயே அது தோல்வியடைந்தது. நடைமுறைச் சாத்தியமற்றது என்பதால் தனிநாட்டுக் கோரிக்கை தோல்வியடைந்தது.
இரண்டும் அடைந்த தோல்வியிலிருந்து தமிழ்த் தலைவர்கள் கற்றுக் கொள்ளாவிட்டால் மீட்சி இல்லை.
அசியல் தீர்வை அடைவதற்குக் குறுக்கு வழிகள் இல்லை. கிடைக்கும் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் முழுமையான அரசியல் தீர்வை அடையலாம். இது தான் ஆக்கபூர்வமான போராட்டப் பாதை. தென்னிலங்கையிலுள்ள நட்பு சக்திகளை இனங்கண்டு அவர்களுடன் கைகோர்த்து இப்பாதையில் முன்னேறுவதே இன்றைய தேவை. அதுவே தீர்வுக்கான மார்க்கம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply